Published : 21 Jan 2023 05:02 AM
Last Updated : 21 Jan 2023 05:02 AM

மத்திய அரசுத் துறைகளில் பணியாற்ற நாடு முழுவதிலும் 71,000 பேருக்கு பிரதமர் மோடி நியமன ஆணை

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 71,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி காட்சி மூலம் வழங்கினார். மத்திய அரசுப் பணிக்கான பயிற்சி வகுப்புகளில் பங்கேற்றவர்கள் தங்கள் அனுபவங்களை பிரதமருடன் பகிர்ந்து கொண்டனர். படம்: பிடிஐ

புதுடெல்லி: மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்ற, நாடு முழுவதிலும் 71,000 பேருக்கு பணிநியமன ஆணைகளை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் வழங்கினார்.

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதுகுறித்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆய்வு செய்த பிரதமர் மோடி, அடுத்த 18 மாதங்களில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். நாடு முழுவதும் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், ‘ரோஜ்கார் மேளா’வை (வேலைவாய்ப்பு திருவிழா) கடந்த அக்டோபரில் அவர்தொடங்கி வைத்தார். அப்போதே, முதல்கட்டமாக 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. நவ.22-ம் தேதி நடந்த நிகழ்ச்சியில், 71 ஆயிரம் பேருக்கு நியமன ஆணைகளை பிரதமர் மோடி வழங்கினார்.

இந்நிலையில், 3-வது கட்டமாக, மேலும் 71,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் வழங்கினார். அத்துடன், புதிதாக நியமிக்கப்பட்ட ஊழியர்களிடம் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

நியமன ஆணை பெற்றவர்களுக்கு இணையதளத்தில் ‘கர்மயோகி பிராரம்ப்’ என்ற தலைப்பில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அந்த வகுப்பில் பங்கேற்றது குறித்த தங்களது அனுபவங்களை, பணி நியமனம் பெற்ற இளைஞர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.

நாடு முழுவதிலும் இருந்து இளநிலை பொறியாளர்கள், ரயில் ஓட்டுநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஆய்வாளர், உதவி ஆய்வாளர், காவலர், ஸ்டெனோகிராபர், இளநிலை கணக்காளர், வருமான வரித்துறை ஆய்வாளர், ஆசிரியர், நர்ஸ், சமூக பாதுகாப்பு அதிகாரி என மத்திய அரசு துறைகளின் பல்வேறு பதவிகளில் பணியாற்ற 71,000 பேருக்கு நியமன ஆணைவழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகள் கூறியபோது, ‘‘மத்திய அரசுத் துறைகளில் சுமார் 9.79 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அவற்றில் ரயில்வேயில் 2.93 லட்சம், பாதுகாப்பு துறையில் 2.64 லட்சம், உள்துறையில் 1.43 லட்சம், அஞ்சல் துறையில் 90,000, வருவாய் துறையில் 80,000, கணக்கு தணிக்கை துறையில் 26,000, சுரங்கத் துறையில் 7,000, அணுசக்தி துறையில் 9,400 உட்பட மத்திய அரசின் பல்வேறு துறைகளில் லட்சக்கணக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன’’ என்றனர்.

நாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசு பல்வேறுநடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, 18 மாதங்களில் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசுப் பணி வழங்கப்பட உள்ளது. தவிர, தனியார் வேலைவாய்ப்புகளை பெருக்கவும் மத்திய அரசு தீவிரநடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்காக ‘ஸ்டார்ட்-அப்' திட்டத்தின் கீழ் புதிய தொழில் தொடங்ககடன் உதவி வழங்கப்படுகிறது. இளைஞர்களின் தொழில் திறனை மேம்படுத்த பல்வேறு திட்டங்களில் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. ‘ஸ்கில் இந்தியா’ திட்டத்தின் கீழ் மட்டும் இதுவரை 1.50 கோடிக்கு மேற்பட்ட இளைஞர்களுக்கு தொழில் திறன் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x