

தேர்தல் வேட்பு மனுவில் தவறான தகவல் கொடுத்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட அர்விந்த் கேஜ்ரிவால், தனது மனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் சரியான முகவரியை மறைத்துள்ளார். அத்துடன் தன்னுடைய வீட்டின் உண்மையான சந்தை மதிப்பை குறைத்து குறிப்பிட்டுள்ளார். உள்நோக்கத்துடன் திட்டமிட்டே பிரமாண பத்திரத்தில் தவறான தகவல்களை கொடுத்துள்ளார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி தன்னார்வ தொண்டு நிறுவனமான மவுலிக் பாரத் அறக்கட்டளை டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு கேஜ்ரிவால் சார்பில் வழக்கறிஞர் ரிஷிகேஷ் குமார் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நேற்று மாஜிஸ்திரேட் ஆசிஷ் குப்தா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தில் கேஜ்ரிவால் ஆஜரானார்.
அப்போது நீதிபதி கூறும் போது, ‘‘தவறான முகவரி கொடுத் தது, வீட்டின் மதிப்பை குறைத்து காட்டியது ஆகியவை வேண்டு மென்றே மறைப்பதாகும். எனவே, இந்த வழக்கில் விசாரணை நடத்த போதுமான முகாந்திரம் இருக்கிறது’’ என்று தெரிவித்தார். எனினும், ரூ.10 ஆயிரம் பிணைத்தொகையை செலுத்தி ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்று கேஜ்ரிவாலுக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணை ஏப்ரல் 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.