Published : 20 Jan 2023 04:45 AM
Last Updated : 20 Jan 2023 04:45 AM

ராமர் பாலத்தை தேசிய புராதன சின்னமாக அறிவிக்க நடவடிக்கை - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: ராமர் பாலத்தை தேசிய புராதனச் சின்னமாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆதம் பிரிட்ஜ் என்று அழைக்கப்படும் ராமர் பாலம், தமிழகத்தின் பாம்பனுக்கும், இலங்கையின் மன்னார் தீவுக்கும் இடையே, கடலுக்குள் 50 கி.மீ. நீளத்துக்கு அமைந்துள்ளது. இந்தப் பாலம், சீதையை மீட்க ராமர் கட்டிய பாலம் என்று புராணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது 2005-ம் ஆண்டில் சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந் தார். "ராமர் பாலத்தை தேசிய புராதனச் சின்னமாக அறிவிக்க வேண்டும். சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்" என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், சேது சமுத்திரக் கால்வாய் திட்டப் பணிகளுக்கு தடை விதித்து 2007-ம் ஆண்டில் உத்தரவிட்டது. நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் புதிதாக மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை வேகம் பெற்றது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா அமர்வு முன் நேற்று மீண்டும் வழக்கு விசாரணை நடைபெற்றது.

அப்போது மத்திய அரசுத் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். அவர் வாதாடும்போது, “ராமர் பாலத்தை தேசிய புராதனச் சின்னமாக அறிவிப்பது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த விவகாரத்தை மத்திய அரசு மிகவும் கவனமாகப் பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும். மனுதாரர் சுப்பிரமணியன் சுவாமி, அரசிடம் கூடுதல் ஆவணங்களைச் சமர்ப்பிக்கலாம்" என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, “இந்த விவகாரத்தை மத்திய அரசு இழுத்தடிக்கிறது. அமைச்சரையோ, அதிகாரிகளையோ சந்திக்க நான் விரும்பவில்லை. அரசு விரைந்து முடிவெடுக்க வேண்டும். குழப்பம் ஏற்பட்டால், மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடுவேன்" என்றார்.

பின்னர், தலைமை நீதிபதி சந்திர சூட், “மனுதாரர் சுப்பிரமணியன் சுவாமி விரும்பினால் கூடுதல் ஆவணங்களை அரசிடம் தாக்கல் செய்யலாம். மத்திய அரசின் முடிவில் அதிருப்தி ஏற்பட்டால், அவர் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடலாம்" என்று உத்தரவிட்டார்.

இதற்கிடையில், "எனது கோரிக்கை தொடர்பாக மத்திய அரசு உரிய பதில் அளிக்கவில்லை. எனவே, மத்திய அரசின் கேபினட் செயலருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப வேண்டும்" என்று தலைமை நீதிபதி சந்திர சூட்டிடம், சுப்பிரமணியன் சுவாமி நேற்று முறையிட்டார். ஆனால், தலைமை நீதிபதி இந்தக் கோரிக்கையை ஏற்கவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x