

தெலங்கானா மாநிலத்தில் ரயில் தண்டவாளத்தில் சிவப்பு கொடியை நட்டுவிட்டு கேட்மேன் தூங்கியதால் அப்பகுதியில் 30 நிமிடங்களுக்கு ரயில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
நிஜாமாபாத் மாவட்டம், சதாசிவ நகர் மோஷம்பூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்துக்கு நடுவே சனிக்கிழமை சிவப்பு கொடி நடப்பட்டிருந்தது.
அப்போது காச்சிகூடா-போதன் பயணிகள் ரயில் அவ்வழியாக வந்தது. சிவப்புக் கொடியைப் பார்த்த ஓட்டுநர், சிக்னல் பிரச்சினை காரணமாக இருக்கலாம் என நினைத்து ரயிலை நிறுத்தினார்.
சுமார் அரை மணி நேரமாகியும் சிவப்பு கொடி அகற்றப்படாமல் இருந்ததால், ஓட்டுநரும் பயணிகளும் ரயிலிலிருந்து இறங்கிச் சென்று பார்த்தனர். அங்கு கேட்மேன் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்தது தெரியவந்தது. பின்னர் அந்த கேட் மேனை எழுப்பி, கொடியை அகற்றிய பின்னர் ரயில் புறப்பட்டுச் சென்றது.
தெலங்கானாவில் ஆளில்லா ரயில்வே கேட் ஒன்றை கடக்க முயன்ற பள்ளி பஸ் மீது ரயில் மோதிய விபத்து நடந்த 2 நாட்களில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
ரயில்வே துறையின் அலட்சியப் போக்கால் லட்சக்கணக்காண பயணிகள் அவதிப்படுவது வாடிக்கையாகி விட்டது. குறிப்பாக, ஆளில்லா ரயில்வே கேட்டுகளால் அப்பாவி மக்கள் பலியாவது, ரயில் பயணத்தில் போதிய பாதுகாப்பு இல்லாதது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.