Published : 04 Dec 2016 12:09 PM
Last Updated : 04 Dec 2016 12:09 PM

பதுக்கப்பட்ட ரூ.72 லட்சம் மதிப்புள்ள புதிய ரூ.2000 நோட்டுகள் பறிமுதல்: பஞ்சாபில் வாகன உதிரி பாகங்கள் நிறுவனத்தில் சோதனை

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் இருந்து ரூ.1.20 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் ரூ.72 லட்சம் புதிய 2,000 ரூபாய் நோட்டுகளாக இருந்தது வருமான வரித் துறை அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கறுப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிக்கும் நடவடிக்கையாக கடந்த நவம்பர் 8-ம் தேதி நள்ளிரவு முதல் பழைய 500, 1000 ரூபாய் நோட்டு களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் காலாவதியான அந்த நோட்டுகளை கறுப்புப் பணமாக பதுக்கி வைத்திருக்கும் பலர் வங்கி அதிகாரிகள் உறுதுணையுடன் வெள்ளையாக மாற்றி வருவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து கறுப்புப் பண பதுக்கல்காரர்களுக்கு உதவிய பல்வேறு பொதுத்துறை வங்கி களைச் சேர்ந்த 27 அதிகாரிகள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் கடந்த வியாழக்கிழமை பெங்களூருவில் உள்ள இரு அரசு பொறியாளர்களின் வீடு களில் நடத்தப்பட்ட சோதனையில் புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் கொண்ட ரூ.5.7 கோடி கறுப்புப் பணம் சிக்கியது. புதிய ரூபாய் நோட்டுகளுக்காக வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்கள் முன்பாக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழலில் கோடிக் கணக்கில் கட்டுக்கட்டாக புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் சிக்கியது வருமான வரித் துறை அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்தது.

இந்தச் சூழலில் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இயங்கி வரும் பஜான் சன்ஸ் என்ற வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத் திலும், அதன் அதிபரின் வீடுகளி லும் என ஒரே நேரத்தில் 5 இடங் களில் வருமான வரித் துறையினர் வெள்ளிக்கிழமை மாலை அதிரடி யாக சோதனை நடத்தினர். இதில் ரூ.1.20 கோடி ரூபாய் மதிப்புள்ள கறுப்புப் பணம் சிக்கியுள்ளது. அதில் ரூ.72 லட்சத்துக்கு புதிய 2,000 ரூபாய் நோட்டுகளாக இருந்தது. எஞ்சிய தொகைகள் அனைத்தும் ரூ.100 கட்டுகளாக இருந்தன.

பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஹரியாணா மாநில வருமான வரித் துறை முதன்மை இயக்குநர் பிரனீத் சச்தேவ் உத்தரவின்பேரில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. கறுப்புப் பணத்தை மாற்ற உதவிய வங்கி அதிகாரிகள் மீதும் வருமான வரித் துறை சார்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x