

புதுடெல்லி: நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ள நிலையில், அவரை பாராட்டியுள்ள காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ்,"அவரைப் போன்றவர்கள் இந்திய அரசியலுக்கு அதிகம் தேவை" என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில்,"பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் விஜய் மெர்ச்சன்ட் அவரது தொழிலில் உச்சத்தில் தான் ஒய்வு பெற்றது குறித்து கூறும் போது: அவர் ஏன் இன்னும் போகவில்லை என்றும் மக்கள் கேட்காமல், அவர் ஏன் இப்போதே செல்கிறார் என்ற நிலையிலேயே உங்கள் ஓய்வை அறிவித்து விடுங்கள் என்றார். அவரது வார்த்தைகளை பின்பற்றி, கிவி பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அவரைப் போன்றவர்கள் இந்திய அரசியலில் அதிகம் தேவை" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அடுத்த மாதம் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். பிப்ரவரி 7ஆம் தேதிக்கு முன்னர் தொழிலாளர் கட்சித் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்வதாகவும் அறிவித்தார். வரும் அக்டோபர் 14ஆம் தேதி நியூசிலாந்தில் பிரதமர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஜெசிந்தா ஆர்டெர்ன் அதுவரை நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்வார்.
உலக வரலாற்றில் பிரதமர் பதவியை வகித்த இளம் வயது பெண் என்ற அந்தஸ்தை பெற்றவர் ஜெசிந்தா ஆர்டெர்ன். அவரது பதவிக்காலத்தில் கரோனா பெருந்தொற்று சவாலை திறம்பட எதிர்கொண்டார். பொருளாதார மந்தநிலை, க்ரைஸ்ட்சர்ச் துப்பாக்கிச் சூடு, ஒயிட் தீவு எரிமலை வெடிப்பு என பல சவால்களைத் திறம்பட கையாண்டதால் அவர் உலக அளவில் அறியப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.