

அண்மையில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ‘அம்மா உணவகம்’ திட்டம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. பிற மாநிலங்களும் இத்திட்டத்தை பின்பற்றி மலிவு விலை உணவகங்கள் திறந்து வருகின்றன.
இந்த வரிசையில் ஆறாவது மாநிலமாக மத்தியப் பிரதேசம் இணைகிறது. இங்கு வரும் 25-ம் தேதி, ‘மாமா உணவகம்’ என்ற பெயரில் இத்திட்டத்தை முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தொடங்கிவைக்க உள்ளார். பாரதிய ஜனதாவின் தாய் அமைப்பான ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்) நிறுவனர்களில் ஒருவரான தீன்தயாள் உபாத்யாயாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவரது பிறந்த நாளில் இத்திட்டம் தொடங்கப்படுகிறது. ‘தீன் தயாள் தாலி’ என்ற பெயரிலான இத்திட்டத்தின் கீழ் 4 ரொட்டிகள், சிறிதளவு சாதம், பருப்பு, காய்கறி மற்றும் புலாவ் உணவு சேர்த்து வெறும் 5 ரூபாய்க்கு வழங்கப்பட உள்ளது.
இது குறித்து சிவராஜ்சிங் சவுகான் கூறும்போது, “இந்த உணவகங்கள் முதல்கட்டமாக ம.பி.யின் போபால், குவாலியர், இந்தோர், ஜபல்பூர் ஆகிய நகரங்களில் தொடங்கப்படும். இதன் வெற்றியை தொடர்ந்து படிப்படியாக மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்” என்றார்.
பின்பற்றும் மற்ற மாநிலங்கள்
தமிழகத்தைப் பின்பற்றி இதற்கு முன் 5 மாநிலங்களில் மலிவு விலை உணவகம் திறக்கப்பட்டுள்ளது. தெலங்கானாவில் ஹைதராபாத் மாநகராட்சி சார்பில் ரூ.5-க்கு மதிய உணவு அளிக்கும் திட்டம் கடந்த 2014-ல் நடைமுறைக்கு வந்தது. ஒடிசாவில் ‘ஆஹார் (ஆகாரம்)’ எனும் பெயரில் ரூ.5-க்கு உணவு அளிக்கும் திட்டத்தை கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் செயல்படுத்தி வருகிறார். இங்கு 30 மாவட்டங்களில் 121 உணவகங்கள் செயல்படுகின்றன.
உத்தராகண்ட் மாநிலத்தில் ‘இந்திரா அம்மா உணவகம்’ என்ற பெயரில் காங்கிரஸ் அரசால் கடந்த நவம்பரில் மலிவு விலை உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இவற்றில் ரூ.20-க்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. உ.பி. தலைநகர் லக்னோவில் தொழிலாளர்களுக்காக ரூ.10-க்கு மதிய உணவு அளிக்கும் திட்டத்தை முதல்வர் அகிலேஷ் சிங் யாதவ் கடந்த மே மாதம் தொடங்கியுள்ளார். இதுபோல் ஆந்திராவில் ‘அண்ணா உணவகம்’ என்ற பெயரில் மலிவு விலை உணவகத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த மாதம் தொடங்கியுள்ளார்.
டெல்லியில் ‘ஆம் ஆத்மி உணவகம்’ எனும் பெயரில் மூன்று வேளையும் தொழி லாளர்களுக்கு உணவளிக்க முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் திட்டமிட்டுள்ளார். இதுபோல் ராஜஸ்தான் அரசும் மலிவு விலை உணவகம் திறக்க பரிசீலித்து வருகிறது.