சமாஜ்வாதி கட்சியில் மீண்டும் அதிகாரப்போட்டி: வேட்பாளர் தேர்வில் அகிலேஷ், சிவ்பால் மோதல்

சமாஜ்வாதி கட்சியில் மீண்டும் அதிகாரப்போட்டி: வேட்பாளர் தேர்வில் அகிலேஷ், சிவ்பால் மோதல்
Updated on
2 min read

உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், ஆளும் சமாஜ்வாதி கட்சியில் அதிகாரத்தை நிலைநாட்டும் குடும்பச் சண்டை மீண்டும் தலை தூக்கியுள்ளது.

முதல்வர் அகிலேஷும், அவரின் சித்தப்பா சிவ்பால் யாதவும் இருவேறு அதிகார மையங்களாக செயல்பட்டு, தனித்தனியாக வேட்பாளர் பட்டியல்களைத் தயாரித்து, மோதலுக்கு தயாராகி வருகின்றனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. சமாஜ்வாதி கட்சி சார்பில் கடந்த 11-ம் தேதி 23 வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், கட்சியின் தேசியத் தலைவர் முலாயம் சிங் யாதவ் மற்றும் மாநிலத் தலைவரான சிவ்பால் யாதவ் ஆகியோரின் விருப்பத்துக்கு ஏற்ப பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

கிரிமினல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் முக்தர் அன்சாரியின் சகோதரரும், குவாமி ஏக்தா தளம் எம்எல்ஏவுமான சிக்பதுல்லா அன்சாரி, கொலை, கொள்ளை தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட வழக்குகளை சந்திக்கும் அதிக் அகமது, சிபிஐயால் கைது செய்யப்பட்ட அர்மான் திரிபாதி போன்றவர்கள் முதல் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

இதற்கு முதல்வர் அகிலேஷ் யாதவ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். ஆட்சி நிர்வாகத்தின் மீதான பொதுமக்களின் வாக்கெடுப்பாக வரும் தேர்தல் அமையும் என்பதால், தகுதியான வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பது அகிலேஷின் நிலைப்பாடாக உள்ளது.

ஆனால், தேர்தலில் வெற்றி வாய்ப்பையே பிரதானமாக கருத வேண்டும். தொகுதியில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளவர்கள் மட்டுமே, வேட்பாளராக அறிவிக்கப்படுவார்கள் என்றும், வேட்பாளர் தேர்வு விஷயத்தில் கட்சித் தலைவரான தனக்கே முழு அதிகாரம் இருப்பதாகவும், சிவ்பால் யாதவ் கூறி வருகிறார்.

கட்சிப் பதவி பறிப்பு விவகாரத்தில் அண்மையில் அகிலேஷுக்கும், சிவ்பாலுக்கும் இடையே ஏற்பட்ட மோதலை முலாயம் சிங் தலையிட்டு, சமரசப்படுத்தி ஓரளவு தீர்த்துவைத்தார். இந்நிலையில், வேட்பாளர் தேர்வு விவகாரத்தில் இருவரும் முரண்பட்டு நிற்கின்றனர்.

இதனால் தேர்தலுக்கு முன்பாகவே, சமாஜ்வாதிக் கட்சியில் மீ்ண்டும் ஒரு குடும்பச் சண்டை வெடிக்கும் சூழல் நிலவுகிறது. இதனை உறுதி செய்யும் விதமாக, 175 தொகுதிகளுக்கு சிவ்பால் யாதவ் இறுதி செய்து வைத்திருந்த வேட்பாளர்களின் பட்டியலை அகிலேஷ் பொருட்படுத்தாமல், புதிய பட்டியலை தயாரித்துள்ளார்.

மொத்தமுள்ள 403 தொகுதிகளுக்கும் முழுக்க தனது சொந்த தேர்வின் அடிப்படையில் வேட்பாளர்கள் பெயர்களை இறுதி செய்து, அப்பட்டியலை தேசியத் தலைவர் முலாயம் சிங்குக்கு அனுப்ப அகிலேஷ் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 3 நாட்களில் 2-வது முறையாக இருவருக்கும் இடையே அதிகாரச் சண்டை பகிரங்கமாக வெளிப்பட்டுள்ளது. கடந்த, 24-ம் தேதி, இளம் தலைமுறை எம்எல்ஏக்கள் வீடுகளுக்குச் சென்று அவர்களை சந்தித்த அகிலேஷ், தேர்தலில் மீ்ண்டும் போட்டியிட கட்டாயமாக வாய்ப்பளிக்கப்படும் என உறுதி அளித்தார்.

இதையறிந்த சிவ்பால் யாதவோ ட்விட்டர் மூலம், ‘சட்டப்பேரவைத் தேர்தலில் யார் யார் போட்டியிடுவது என்பதை, கட்சியின் மாநிலத் தலைவராக நானே தீர்மானிப்பேன். நான் தான் இங்கு பாஸ்’ என்கிற ரீதியில் பதிலடி கொடுத்திருந்தார்.

மேலும், ‘175 வேட்பாளர்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்டுவிட்டது. கட்சியின் சட்ட திட்டங்களின் படி, மாநில முதல்வரும், சட்டப்பேரவைக் கட்சியால் தான் தேர்வு செய்யப்படுவார். யாரும் எவ்வித ஒழுங்கீன நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது’ என்றும் சிவ்பால் எச்சரித்தார்.

அதே சமயம் அகிலேஷுக்கு ஆதரவாக செயல்படும், மற்றொரு சித்தப்பாவும், கட்சியின் தேசிய பொதுச் செயலாளருமான ராம்கோபால் யாதவ், ‘சமாஜ்வாதி ஆட்சி மன்றக் குழுவின் உறுப்பினர் செயலர் என்ற முறையில் வேட்பாளர் தேர்வில் நான் தான் இறுதி முடிவெடுப்பேன்’ எனக் கூறிவருகிறார்.

எனினும், மகன், சகோதரர்கள் மற்றும் கட்சியின் முன்னோடிகள் என பல தரப்பையும் அரவணைத்து, வேட்பாளர்கள் பட்டியலை கட்சியின் தேசியத் தலைவர் முலாயம் சிங் யாதவே இறுதி செய்வார். ஆனால், அதற்கு முன்பாக பெரும் சண்டை, சச்சரவுகளை கடக்க வேண்டியிருக்கும் என கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in