விலை உயர்வுக்கு எதிராக மக்களவையில் ஆக்ரோஷமாக குரல் எழுப்பிய ராகுல்

விலை உயர்வுக்கு எதிராக மக்களவையில் ஆக்ரோஷமாக குரல் எழுப்பிய ராகுல்
Updated on
1 min read

மக்களவையில் விலைவாசி பிரச்சினையை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டபோது காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் அவர்களோடு இணைந்து ஆக்ரோஷமாக கோஷ மிட்டார்.

நாடாளுமன்ற அன்றாட அலுவல்களில் ராகுல் காந்தி அதிகம் ஈடுபாடு காட்டுவது இல்லை, அவையில் அமைதியாகவே இருப்பார் என்று அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் கூறப்படுகின்றன.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ராகுல் காந்தி மக்களவையில் திங்கள்கிழமை ஆக்ரோஷமாக குரல் எழுப்பினார். பின் வரிசையில் அமர்ந்திருந்த அவர் எம்.பி.க்களோடு சேர்ந்து முன்வரிசைக்கு எழுந்துவந்தார்.

பாஜக ஆட்சிக்கு வந்தால் நல்ல காலம் பிறக்கும் என்று அந்தக் கட்சி பிரச்சாரம் செய்ததை சுட்டிக் காட்டி “நல்ல காலம் வரும், விலைவாசி விண்ணை முட்டும்” என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷமிட்டனர். அவர்களோடு சேர்ந்து ராகுலும் உரக்க குரல் கொடுத்தார்.

ராகுலின் செயல்பாடு எதிர்க் கட்சித் தலைவர்களை மட்டுமன்றி ஆளும் கட்சி தலைவர்களையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மக்களவையில் அனைத்து எம்.பி.க்களின் பார்வையும் ராகுலின் மீது பதிந்தது.

பாஜக மூத்த தலைவர் ராஜீவ் பிரதாப் ரூடி கூறியபோது, எதிர்க்கட்சி வரிசையில் காங்கிரஸ் அமர்ந்த பிறகு ராகுல் மிகவும் துடிப்பாகக் காணப்படுகிறார் என்று தெரிவித்தார்.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் கூறியபோது, அவை நடவடிக்கைகளில் ராகுல் காந்தியும் பங்கேற்க தொடங்கியிருப்பது நல்ல தொடக்கம் என்று தெரிவித்தார். ராகுலின் செயல்பாடுகளை முதல் வரிசையில் அமர்ந்திருந்த சோனியா காந்தி அமைதியாக பார்த்து கொண்டிருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in