Last Updated : 18 Jan, 2023 09:07 AM

2  

Published : 18 Jan 2023 09:07 AM
Last Updated : 18 Jan 2023 09:07 AM

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்: பிரியங்கா காந்தி அறிவிப்பு

பிரியங்கா காந்தி | கோப்புப்படம்

பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அறிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியை பிடிக்க ஆளும் பாஜக, எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், மஜத உள்ளிட்டவை பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகின்றன. இந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் ஏழை மற்றும் நடுத்தர வகுப்பினருக்கு மாதம் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெங்களூருவில் நேற்று நடைபெற்ற மகளிர் காங்கிரஸ் மாநாட்டில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அந்த மாநாட்டில் பிரியங்கா காந்தி பேசியதாவது:

கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. அரசின் திட்டங்களை நிறைவேற்ற அமைச்சர்கள் 40 சதவீத கமிஷன் வாங்குகிறார்கள் என ஒப்பந்ததாரர்கள் தெரிவிக்கின்றனர். அரசின் வேலைகளை பெறுவதற்காக ரூ.30 லட்சம் வரை லஞ்சம் வாங்குகிறார்கள். கடந்த 3 ஆண்டுகளில் ரூ.1.5 லட்சம் கோடி அளவுக்கு பாஜகவினர் கொள்ளையடித்துள்ளனர். பெங்களூருவில் ரூ.8 ஆயிரம் கோடியில் மேற்கொண்ட வளர்ச்சி பணிகளுக்கு ரூ.3 ஆயிரத்து 200 கோடி கமிஷனாக பெற்றுள்ளார்கள் என கூறப்படுகிறது.

இதனால் மக்கள் பாஜக ஆட்சியின் மீது கோபத்தில் இருக்கிறார்கள். வருகிற தேர்தலில் காங்கிரஸ் மகத்தான வெற்றி பெறும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் தலா ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும். கிருஹ‌ லட்சுமி திட்டத்தின் இந்த தொகை குடும்ப தலைவிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். விலைவாசி உயர்வு, கேஸ் சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்ட பாதிப்புகளில் சிக்கியுள்ள குடும்ப தலைவிகளுக்கு இந்த பணம் பேருதவியாக இருக்கும். இந்த திட்டத்தின் மூலம் 1.5 கோடி பெண்கள் பயனடைவார்கள்.

நான் ஒரு குடும்பத் தலைவி என்பதால் பெண்களின் பிரச்சினையை நன்கு அறிவேன். பெண்கள் பொருளாதார சுதந்திரம் பெற்றவர்களாக மாற வேண்டும் என காங்கிரஸ் விரும்புகிறது. வருகிற தேர்தலில் பெண்களை மையப்படுத்திய பிரத்யேக தேர்தல் அறிக்கை, காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியிடப்படும். பெண்கள் அதிகாரத்துக்கு வரவும், அவர்கள் சொந்தக் காலில் நிற்கவும் காங்கிரஸ் துணையாக இருக்கும்.

இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x