பாஜக தேசிய செயற்குழு கூட்டம்: பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Updated on
1 min read

புதுடெல்லி: பாஜகவின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்க வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் ஜனவரி 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையொட்டி நாடு முழுவதிலும் உள்ள கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் இணை பொறுப்பாளர்களுடன் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் பாஜகவின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் உள்ள என்டிஎம்சி மாநாட்டு மையத்தில் நேற்று தொடங்கியது. இதில் பிரதமர் நரேந்திர மோடியுடன் 35 மத்திய அமைச்சர்கள், 12 முதல்வர்கள், 37 பிராந்திய தலைவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

முன்னதாக இந்தக் கூட்டத்துக்கு படேல் சவுக் பகுதியில் இருந்து என்டிஎம்சி தலைமை அலுவலகம் வரை சுமார் 1 கி.மீ. தூரத்துக்கு பிரதமர் மோடி ஊர்வலமாக வந்தார்.

பாஜக தொண்டர்களும் ஆதரவாளர்களும் பிரதமர் மீது மலர்களை தூவியும் முழக்கங்கள் எழுப்பியும் வழிநெடுகிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். சாலை நெடுகிலும் பிரதமரின் மிகப்பெரிய கட்-அவுட்கள் வைக்கப்பட்டிருந்தன. அரசின் பல்வேறு திட்டங்கள் தொடர்பாக சுவரொட்டிகளும் இடம்பெற்றிருந்தன. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நாட்டுப்புறக் கலைஞர்களின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. பலர் தேசபக்தி பாடல்கள் பாடினர்.

நேற்றைய கூட்டத்துக்கு பிறகு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.எஸ்.பிரசாத் கூறும்போது, “2023-ம் ஆண்டு மிகவும் முக்கியமானது என்றும் இந்த ஆண்டு 9 மாநிலத் தேர்தல்களிலும், 2024-ம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் நாம் போராடி வெற்றி பெற வேண்டும் என்று ஜே.பி. நட்டா கூறினார். பலவீனமான சாவடிகளை கண்டறிந்து அவற்றை பலப்படுத்த பிரதமர் மோடி உத்தரவிட்டார். சுமார் 72,000 சாவடிகள் கண்டறியப்பட்டு, 1.32 லட்சம் சாவடிகளை எட்டியுள்ளோம்’’ என்றார்.

பல்வேறு அரசியல் மற்றும் பொருளாதார விவகாரங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப் பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கூட்டம் நடைபெறும் என்டிஎம்சி மாநாட்டு மையத்தில் பல்வேறு கருப்பொருளிலான கண்காட்சியை பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா நேற்று தொடங்கி வைத்தார்.

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் 3 ஆண்டு பதவிக் காலம் இம்மாதம் முடிவடைகிறது. இந்நிலையில் 2024 மக்களவைத் தேர்தலின்போது கட்சிக்கு அவர் தலைமை வகிக்கும் வகையில் அவரது பதவிக் காலம் இக்கூட்டத்தில் நீட்டிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in