Last Updated : 17 Jan, 2023 09:34 AM

 

Published : 17 Jan 2023 09:34 AM
Last Updated : 17 Jan 2023 09:34 AM

17-வது மக்களவை குளிர்கால கூட்டத்தொடரில் அதிக கேள்விகள் கேட்டு தமிழக எம்.பி.க்கள் சாதனை

கோப்புப்படம்

புதுடெல்லி: பிஆர்எஸ் இந்தியா, பிரைம் பாயின்ட் பவுண்டேஷன் ஆகிய 2 சமூக ஆய்வு அமைப்புகள், மக்களவை குளிர்கால கூட்டத் தொடரில் எம்.பி.க்களின் செயல்பாடுகள் குறித்த புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளன. இதில் தருமபுரி திமுக எம்.பி. டிஎன்வி செந்தில்குமார் முதலிடம் பிடித்துள்ளார். இவர் மொத்தம் 453 புள்ளிகள் பெற்று தேசிய அளவில் 17-ம் இடத்தில் உள்ளார். 384 கேள்விகள் எழுப்பியது, 66 விவாதங்களில் பற்கேற்றது, 194 விவாதங்களை முன்மொழிந்தது, 3 தனி நபர் மசோதாக்கள் ஆகியவை இவரது பணியில் இடம் பெற்றுள்ளன.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் எம்.பி. செந்தில்குமார் கூறும்போது, “முதல் நாள் தொடங்கி புள்ளிகளை எதிர்பார்க்காமல் மக்களுக்காக நாடாளுமன்றத்தில் பணியாற்றி வருகிறேன். விவாதங்களில் குறிப்பிட்ட கட்சிகளுக்கான வாய்ப்புகள் முடிந்த பிறகு சபாநாயகரிடம் வாய்ப்பு கேட்டு அவையில் காத்திருந்தால் பேசும் வாய்ப்பு அதிகம் கிடைக்கிறது. இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி எந்நேரமும் பொதுமக்கள் மற்றும் தொகுதிவாசிகளின் பிரச்சினை களை மனதில் வைத்திருப்பேன்” என்றார்.

தமிழக எம்.பி.க்களில் காங் கிரஸின் தென்காசி எம்.பி. தனுஷ் எம்.குமார் 2-ம் இடம் பெற்றுள்ளார். 409 புள்ளிகள் பெற்ற இவர், 384 கேள்விகளை எழுப்பி அதிலும் இரண்டாமிடம் பெற்றுள்ளார். முதல் 2 இடங்கள் பெற்ற இருவருமே மக்களவை அமர்வுகளுக்கு நூறு சதவீதம் வருகை புரிந்துள்ளனர்.

அதிமுகவின் ஒரே எம்.பி.யான பி.ரவீந்திரநாத் குமார், அதிகமாக 97 விவாதங்களில் பேசியிருக்கிறார். மிகவும் குறைவானப் புள்ளிகளை முன்னாள் மத்திய இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் பெற்றுள்ளார். தமிழகத்தின் 39 எம்.பி.க்களில் 16 பேர் மட்டுமே தனி நபர் மசோதா தாக்கலில் பங்கு பெற்றுள்ளனர். தென் சென்னை தொகுதி திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் மிக அதிகமாக 8 மசோதாக்களை தாக்கல் செய்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் கேள்விகளுக்கு எம்பிக்களுக்கு அவையிலும் தனிப்பட்ட முறையில் கடிதங்கள் மூலமாகவும் பதில்கள் அளிக்கப்படுகின்றன. இந்த வாய்ப்புகளை பயன்படுத்துவதில் மகாராஷ்டிர எம்.பி.க்கள் முன்னணி வகிக்கின்றனர். இவர்களது சராசரி புள்ளிகள் 312 ஆகும். ராஜஸ்தான் 259, கேரளா 255, ஆந்திரா 226, தமிழகம் 218 என புள்ளிகள் பெற்றுள்ளனர். இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் பிரைம் பாயிண்ட் நிறுவனர் சீனிவாசன் கூறும்போது, “தங்கள் கட்சிக்கு தொடர்பில்லாத தனிநபர் மசோதாக்களை அதிகமாக தாக்கல் செய்ய எம்.பி.க்கள் முன்வர வேண்டும். தேர்தலில் மீண்டும் போட்டியிடும் எம்.பி.க்களின் சமூகவலைதளங்கள் மற்றும் ஊடக நிகழ்ச்சிகளை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் நாடாளுமன்றத்தில் அவர்களது செயல்பாடுகளை கணக்கில் கொண்டு தொகுதிவாசிகள் வாக்களிப்பது அவசியம். அப்போது தான் மக்கள் நலன் கருதி எம்.பி.க்கள் பணியாற்றுவார்கள்” என்றார்.

கடந்த 14-வது மக்களவை முதற்கொண்டு பிரைம் பாயின்ட் பவுன்டேஷன் சார்பில் தரவுகள் வெளியாகின்றன. இந்த அமைப்பு கடந்த 4 ஆண்டுகளாக தேசிய அளவில் சிறந்த எம்.பி.க்களை தேர்வு செய்து விருதுகளை அளிக்கிறது. இவ்விருதை, காங்கிரஸ் சார்பில் எம்.பி.க்களாக இருந்த பழனியின் கார்வேந்தனும். திருநெல்வேலியின் ராமசுப்புவும் பெற்றுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x