Published : 15 Jan 2023 05:59 AM
Last Updated : 15 Jan 2023 05:59 AM

பஞ்சாபில் தரமற்ற உணவு தானியங்கள் கொள்முதலில் ரூ.5 கோடி வரை லஞ்சம் வாங்கிய எப்சிஐ அதிகாரிகள்

புதுடெல்லி: பஞ்சாபில் இந்திய உணவுக் கழக அதிகாரிகள் கூட்டாக சேர்ந்து ஒவ்வொரு கிடங்குக்கும் சுமார் ரூ.2 கோடி முதல் 5 கோடி வரை லஞ்சம் பெற்றுள்ளதாக சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.

இந்திய உணவு கழகத்துக்கு (எப்சிஐ) உணவு தானியங்கள் கொள்முதல் செய்வதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக பஞ்சாப், ஹரியாணா, டெல்லி உட்பட பல மாநிலங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். குறிப்பாக தரமான உணவு தானியங்கள் கொள்முதல் நடைபெற்றுள்ளதா என்று சோதனை நடந்தது. இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த சோதனையில் பஞ்சாபில் உள்ள எப்சிஐ அதிகாரிகள், கூட்டு சேர்ந்து உணவு தானியங்களை கொள்முதல் செய்ய ஒவ்வொரு கிடங்குக்கும் லஞ்சம் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. தனியார் மில்களில் இருந்து தரமற்ற உணவுதானியங்களை கண்டு கொள்ளாமல் கொள்முதல் செய்வதற்கும், வேறு வழிகளில் ஆதாயம் அடைவதற்கும் எப்சிஐ அதிகாரிகள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பஞ்சாப் எப்சிஐ அதிகாரிகள் மீது சிபிஐ அதிகாரிகள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:

பஞ்சாபில் பயிர்கள் அறுவடை காலங்களில் தனியார் மில் நடத்துபவர்களிடம் இருந்து டிரக்குகளில் கொண்டு வரப்படும் தரமற்ற உணவு தானியங்களை கொள்முதல் செய்து கிடங்குகளில் சேமிக்க எப்சிஐ அதிகாரிகள் லஞ்சம் பெற்றுள்ளனர். ஒரு டிரக் உணவு தானியத்தை கிடங்கில் இறக்கி வைக்க ரூ.1,000 முதல் ரூ.4,000 வரை லஞ்சம் பெற்றுள்ளனர். இதுபோல் அனைத்து கிடங்குகளிலும் லஞ்சம் பெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதன் மூலம் பயிர்கள் கொள்முதல் காலங்களில் ரூ.5 கோடி வரை லஞ்சமாகப் பணம் பெறப்பட்டுள்ளது. அந்தப் பணம் மேலதிகாரிகள் முதல் கடைசி ஊழியர் வரை பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோல் பஞ்சாபில் உள்ள பல எப்சிஐ கிடங்குகளில் முறைகேடு நடந்துள்ளது.

சங்ரூர் மண்டலத்தில் உள்ள உணவு பாதுகாப்பு கிடங்குகளில் மட்டும் 14 ஆயிரம் டிரக்குகள் உணவு தானியங்களை கொண்டு வந்துள்ளன. ஒவ்வொரு டிரக்குக்கும் தனியார் மில் நடத்துபவர்களிடம் இருந்து ரூ.1,600 லஞ்சமாக பெற்றுள்ளனர். இதுபோல் சண்டிகரில் எப்சிஐ மேலாளர் சதீஷ் வர்மா, உதவி மேலாளர் குமார் ஜெனா உட்பட பலரும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

கடந்த 6 மாதங்களாக ரகசியமாக கண்காணித்ததில் இந்ததகவல்கள் உறுதிப்படுத்தப்பட் டுள்ளன. அதன்பின் பஞ்சாபில் 90 இடங்கள் உட்பட மொத்தம் 99 இடங்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. அதன்பின் எப்சிஐ அதிகாரிகள் ராஜீவ் குமார், சதீஷ்வர்மா ஆகியோர் கைது செய்யப் பட்டனர். இவ்வாறு சிபிஐ முதல்தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x