

காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை உடைத்து டெல்லியில் ஆட்சி அமைக்க முயல்வதாக பாரதிய ஜனதா கட்சியினர் மீது புகார் எழுந்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் அலுவலகத்தில் புதன்கிழமை ஆலோசனை கூட்டம் நடந்ததாகக் கருதப்படுகிறது.
பாஜகவின் மூன்று எம்.எல்.ஏக்கள் எம்.பி.யாகி விட்டதால், டெல்லி சட்டசபையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 67 எனக் குறைந்து விட்டது. இனி, டெல்லியில் ஆட்சி அமைக்க 34 உறுப்பினர்கள் தேவையான நிலையில், பாஜக கூட்டணியில் 29 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இவர்களுடன் சுயேச்சை மற்றும் ஐக்கிய ஜனதா தளத்தின் இரு எம்.எல்.ஏக்கள் பாஜகவிற்கு ஆதரவு தர முன் வந்திருப்பதாகக் கருதப்படுகிறது,
இவர்களுடன் காங்கிரஸின் 8 எம்.எல்.ஏக்களில் மூன்றில் ஒரு பங்கை உடைக்க பாஜக முயல்வதாகவும் புகார் எழுந்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் மோடி அலை காரணமாக பாஜக பெருவெற்றி பெற்ற நிலையில், டெல்லியில் மீண்டும் தேர்தல் வந்தால் வெற்றி பெறுவது கடினம் என காங்கிரஸார் நம்புவதாகக் கூறப்படுகிறது. இது கடந்த மாதம் 5 ஆம் தேதியிட்ட ‘தி இந்து’வில் வெளியாகி இருந்தது.
இது குறித்து ஆம் ஆத்மியின் தேசிய அமைப்பாளரும் டெல்லி யின் முன்னாள் முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் கூறும்போது, “ரூ. 20 கோடி விலையில் பாஜக பல எம்.எல்.ஏ.க்களை வாங்க முயல்கிறது. எங்கள் எம்.எல்.ஏ.க்களை வாங்க முடியாமல் காங்கிரஸிடம் முயல்கிறது. மிகவும் தவறான முறையில் ஆட்சி அமைப்பது என்ன ஜனநாயகம்? இப்படி ஆட்சி அமைப்பவர்களால் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியுமா? இதில், பிரதமர் நரேந்திர மோடி அமைதி காப்பது ஏன்?” என்றார்.
இந்த கேள்விகளை எழுப்பும் கேஜ்ரிவாலின் குரலை பதிவு செய்து டெல்லிவாசிகளின் மொபைல் போன்களில் ஒலிக்க வைத்து பாஜகவின் முயற்சியை முறியடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதை மறுக்கும் பாஜகவின் டெல்லி மாநில புதிய தலைவரான ரமேஷ் பிதூரி எம்பி, கேஜ்ரிவாலின் மூளை குழம்பி யுள்ளதாகவும், அதற்காக மருத்துவ சோதனை செய்வது அவசியம் எனவும் கிண்டலடித்துள்ளார்.
தொங்குசட்டசபை நிலை ஏற்பட்ட டெல்லியில், காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்த அர்விந்த் கேஜ்ரிவால், 49 நாள் ஆட்சிக்கு பின் லோக்பால் மசோதாவை அமல்படுத்த முடியவில்லை எனக்கூறி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால், கடந்த பிப்ரவரி மாதம் முதல் டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்து வருகிறது. இந்த மாத இறுதியில் டெல்லியின் துணைநிலை ஆளுநர் அளிக்கும் அறிக்கையைப் பொறுத்து மத்திய அரசு, குடியரசுத் தலைவர் ஆட்சியை நீட்டிப்பதா அல்லது மீண்டும் தேர்தலுக்கு பரிந்துரைப் பதா என முடிவு செய்யும்.