

ரூபாய் நோட்டு விவகாரத்தின் மூலம் தேசிய அரசியலில் முக்கியத் துவம் பெற மம்தா பானர்ஜி முயற்சிப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2 வாரங்களாக அவரது செயல்பாடுகள் இதை ஏற்றுக் கொள்ளும் வகையில் உள்ளன.
மேற்கு வங்கத்தில் இடதுசாரி கூட்டணி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போட்டியிட்டு, தனிப் பெரும்பான்மை பெற்று இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தவர் மம்தா. இம் மாநிலத்தை மட்டும் பிரதானமாக வைத்து தொடங்கப்பட்ட அவரது திரிணமூல் காங்கிரஸ் கட்சி, பிஹார், ஜார்க்கண்ட், அசாம் உள்ளிட்ட மாநிலங்களிலும் போட்டியிட்டு வருகிறது.
இம்மாநிலங்களில் இக்கட்சிக்கு குறிப்பிடத்தக்க அளவில் வெற்றி கிடைப்பதில்லை. என்றாலும் அடுத்து வரவிருக்கும் மக்களவை தேர்தலில் தங்கள் கட்சியை பிரதானமாக முன்னிறுத்த விரும்புகிறார் மம்தா. இதற்கான முன்னேற்பாடாக ரூபாய் மதிப்பு நீக்க விவகாரம் தொடங்கியது முதல், பிரதமர் நரேந்திர மோடியை நேரடியாகக் குறிப்பிட்டு அவர் கடுமையாக எதிர்த்து வருகிறார்.
கடந்த 15-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் விவாதத்தை தொடங்கின. ஆனால் டெல்லியில் அம்மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுடன் இணைந்து கண்டனப் பேரணி நடத்திய மம்தா, குடியரசுத் தலைவரிடம் மனு அளித்தார். மறுநாள், எதிர்க்கட்சியினர் அனைவரும் நாடாளுமன்றத்தின் இரு அவை களிலும் அமளியில் ஈடுபட்டனர். அதே நாளில் டெல்லி, ஆசாத்பூரில் கேஜ்ரிவாலுடன் இணைந்து கண்டனக் கூட்டம் நடத்தினார் மம்தா.
கடந்த திங்கட்கிழமை எதிர்க் கட்சிகள் நாடு முழுவதிலும் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி, குடியரசுத் தலைவரிடம் மனு அளித்தன. அன்று மீண்டும் டெல்லி வந்த மம்தா, ஆம் ஆத்மி கட்சியினருடன் சேர்ந்து ஆர்ப் பாட்டம் நடத்தினார். இத்துடன் நிற்காதவர், தேர்தலைச் சந்திக்கவி ருக்கும் உ.பி.க்கு சென்று லக்னோ வில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
பண மதிப்பு நீக்க அறிவிப்பை எதிர்த்து பிஹாரிலும் இன்றும் நாளையும் மம்தா ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்.
மேற்கு வங்கத்துக்கு வெளியே, கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மம்தா ஒருமுறை டெல்லியில் போராட்டம் நடத்தினார். பிறகு அண்ணா ஹசா ரேவுடன் இணைந்து டெல்லியில் மற்றொரு கூட்டம் நடத்தினார். ஆனால் பிற வட மாநிலங்களுக்கு அவர் சென்றதில்லை.
இந்தமுறை அவர் தேர்தலைச் சந்திக்கவிருக்கும் மாநிலங்கள் அனைத்துக்கும் சென்று பாஜவுக்கு எதிராக போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளார். இவற்றில் பிரதமர் மோடியை நேரடியாகக் குறிப்பிட்டு கடுமையாக பேசி வருவது அவர் தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெற முயற்சிப்ப தாகக் கூறப்படுகிறது.
இது குறித்து திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ ப்ரயன் ‘தி இந்து’விடம் கூறும்போது, “தேசிய அரசியலில் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும் என்பது மம்தாதியின் நீண்ட கால விருப்பம். இதற்கு பண மதிப்பு நீக்க விவகாரம் வழி வகுத்துள்ளது. இதற்கு ஏற்றவாறு அவர் எங்கள் கட்சியின் செயல்திட்டங்களை மாற்றி வருகிறார். இதை எங்கள் கட்சியினர் பின்பற்றுவார்கள்” என்றார்.
சாரதாவை மறைக்க..
பல கோடி ரூபாய் சாரதா நிதி நிறுவன ஊழலைக் குறிப்பிட்டு மம்தாவுக்கு எதிராக பிரதமர் மோடி பேசி வருகிறார். இதைச் சமாளிக்கும் வகையிலான மம்தாவின் இந்த புதிய செயல் திட்டம் அவரது கட்சியினரால் வரவேற்கப்படுகிறது.
காங்கிரஸ் மற்றும் இடது சாரிகள் இல்லாத கூட்டணியை அமைப்பதில் ஜனதா பரிவார் கட்சிகளுக்கு தோல்வி ஏற்பட்டு வருகிறது. இதுபோன்ற முயற்சியை கையில் எடுத்துள்ள மம்தா, தேசிய அரசியலில் ஒரு புதிய கூட்டணியை அமைக்கத் திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது.