

“நீதித் துறைக்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதி போதாது. அதை அதிகப்படுத்த வேண்டும்,” என்று உச்ச நீதிமன்றத்தில் நடந்த பிரிவுபசார விழாவில் பி.சதாசிவம் பேசினார்.
தமிழகத்தைச் சேர்ந்த பி.சதாசிவம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பில் இருந்து சனிக்கிழமையுடன் ஓய்வு பெறுகிறார். அவருக்கு உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பிரிவுபசார விழா வெள்ளிக்கிழமை நடந்தது.
நிகழ்ச்சியில் பி.சதாசிவம் பேசும்போது, “இந்த நீதிமன்றத்தில் பணியாற்ற எனக்கு கிடைத்த வாய்ப்பைக் கவுரமாக கருதுகிறேன். சமூகச் சிந்தனைகள் மாறிவிட்டன, சட்டங்களும் மாறி வருகின்றன. அதற்கு ஏற்ப நீதித்துறை தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். நான் பொறுப்பேற்ற போது, 67,964 வழக்குகள் தேங்கி இருந்தன. தற்போது, 63,500 வழக்குகள் மட்டுமே உள்ளன.
நீதிமன்றத்தின் தீர்ப்புகள் நம் தேசத்தை பிரதிபலிக்க வேண்டும். நீதிபதிகள் அரசியல் சாசனத்துக்கும், மனசாட்சிக்கும் உண்மையாக நடந்து கொள்ள வேண்டும். நீதித்துறைக்கு ஒதுக்கப்படும் நிதி போதுமானதாக இல்லை. அதை உயர்த்தி வழங்க வேண்டும்,” என்றார்.
அடுத்த தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள ஆர்.எம்.லோதா பேசும்போது, “சதாசிவத்தின் எளிமை, அனைவரிடமும் நட்பாக பழகும் தன்மை, காலியிடங்களை நிரப்பிய பணி ஆகியவை பாராட்டுக்குரியவை. நான் என்ன செய்யப் போகிறேன் என்பதை இந்த நிகழ்ச்சியில் பேசுவது பொருத்தமற்றது. உச்ச நீதிமன்றத்துக்கு ஜாதி, மதம், சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பேதம் இல்லை. அரசியல் சாசனத்தின்படி, நடுநிலையோடு நீதிமன்றம் செயல்பட பாடுபடுவேன்,” என்றார்.
ஓய்வுபெறும் பெண் நீதிபதி கியான் சுதா மிஸ்ராவுக்கும் நேற்று
பிரிவுபசாரம் நடந்தது. சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன் வாழ்த்திப் பேசினார். தலைமை நீதிபதி சதாசிவத்தின் மனைவி சரஸ்வதியும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.