Last Updated : 13 Jan, 2023 05:28 AM

 

Published : 13 Jan 2023 05:28 AM
Last Updated : 13 Jan 2023 05:28 AM

‘மாதவிடாய் கால சுகாதார மேலாண்மை இந்தியா’ 3-வது மாநாடு - திருச்சி சமூக சேவை அமைப்பான கிராமாலயா நடத்தியது

கிராமாலயா சார்பில் டெல்லியில் 2 நாள் நடைபெற்ற எம்எச்எம் இந்தியா 3-வது உச்சி மாநாட்டில் ரெக்கிட் பென்கிசர் இந்தியா நிறுவனத்தின் தெற்காசிய வெளியுறவு மற்றும் கூட்டாண்மை இயக்குநர் ரவி பட்நாகர் குத்துவிளக்கு ஏற்றினார்.

புதுடெல்லி: ‘மாதவிடாய் கால சுகாதார மேலாண்மை இந்தியா’ (எம்எச்எம்) 3-வது உச்சி மாநாடு, டெல்லியில் 2 நாள் நடைபெற்றது. இம்மாநாடு திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சமூக சேவை அமைப்பான 'கிராமாலயா' சார்பில் நடைபெற்றது.

இந்தியா முழுவதிலும் உள்ள குடும்பங்களிலும் வெளியிலும் பேசத் தயங்கும் விஷயமாக மாதவிடாய் உள்ளது. பெண்களின் உடல்ரீதியிலான இந்த இயற்கை உபாதையில் பலரும் கவனம் செலுத்துவதில்லை. குறிப்பாக இந்தியாவின் கிராமப்புறங்களில் உள்ள பெண்கள் கவனம் இன்றி அவதிக்கு ஆளாகின்றனர். அவர்களுக்கு உகந்த சானிடரி நாப்கின் கிடைக்காததும் பயன்பாட்டுக்குப் பிறகு அவற்றை அப்புறப்படுத்துவது சிக்கலாக இருப்பதும் இதற்கு காரணமாக உள்ளது.

இது தொடர்பாக பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு 'கிராமாலயா' எனும் சமூக சேவை அமைப்பு 37 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

கிராமாலயா சார்பில் நூறு சதவீத பருத்தி துணியில் சானிடரி நாப்கின்கள் தயாரித்து இலவசமாக வழங்கப்படுகிறது. தமிழகம் உட்பட தென்னிந்தியாவின் 7 மாநிலங்களில் இதுவரை சுமார் இரண்டரை லட்சம் நாப்கின்களை இந்த அமைப்பு விநியோகித்துள்ளது. இந்த சிறந்த பணிக்காக கிராமாலயாவின் நிறுவனரும், முதன்மை அதிகாரியுமான எஸ்.தாமோதரன், 2022-ல் பத்மஸ்ரீ தேசிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

சர்வதேச அமைப்பான கிராமாலயா சார்பில் முதல் உச்சிமாநாடு, கடந்த 2019-ல் டெல்லியிலும் இரண்டாவது உச்சி மாநாடு சென்னையிலும் நடைபெற்றது. கரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட ‘மாதவிடாய் கால சுகாதார மேலாண்மை இந்தியா’ 3-வது உச்சி மாநாடு, டெல்லியில் மீண்டும் நடத்தப்பட்டது.

இந்த 2 நாள் மாநாடு நேற்றுடன் நிறைவு பெற்றது. இதில், வெளிநாடுகள் மற்றும் நாடு முழுவதிலுமிருந்தும் பல்வேறு தனியார், சமூகசேவை அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இவர்களுடன் உத்தரபிரதேசம், பிஹார், ராஜஸ்தான் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களின் கிராமப்புறங்களை சேர்ந்த 180 பெண்களும் சிறப்பு அழைப்பாளர்களாக வந்திருந்தனர்.

இந்தியாவிலுள்ள தூதரகங்களான, ராயல் டேனிஷின் தூதரக அதிகாரி ஃபெர்டி ஸ்வென், குடியரசுநாடுகளில் ஒன்றான மால்டாவின் தூதரக அதிகாரி ரூபன் கவுசி, அவரது மனைவி டாக்டர் ஓல்கா வி.கவுசி ஆகியோர் முதல்நாள் மாநாட்டை தொடங்கி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து சர்வதேச மற்றும் இந்திய அளவிலான பல்வேறு சமூகசேவை அமைப்புகளின் தலைவர்களும் நிர்வாகிகளும் இடம்பெற்ற ஆலோசனைக் கூட்டங்களும் நடைபெற்றன. இவற்றில், மருத்துவர்கள் செய்ய வேண்டியது, விழிப்புணர்வில் எம்எச்எம் அமைப்புகளின் பங்கு, சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் அப்புறப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் குழு விவாதங்கள் நடைபெற்றன.

கிராமாலயா மற்றும் அதைப்போன்று மாதவிடாய் கால விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டு வரும் பல்வேறு சமூக சேவை அமைப்புகள் சார்பில் பெண்கள் பயன்பாட்டுப் பொருட்களின் கண்காட்சியும் நடைபெற்றது. தேசிய அளவிலான சமூக சேவை நிறுவனங்களை சேர்ந்த 10 பேருக்கு கிராமாலயா சார்பில் ‘அவார்டு ஆஃப் எக்ஸலன்ஸ் எம்எச்எம் இந்தியா’ எனும் விருதும் வழங்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x