

உத்தரப் பிரதேச மாநிலம், சஹரான்பூரில் வழிபாட்டுத் தலத்தின் நிலம் தொடர்பான பிரச்சினையில் இரு பிரிவினரி டையே நிகழ்ந்த மோதலில் 3 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு தீ வைக்கப்பட்டது. கலவரத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சஹரான்பூரில் குதுப்ஷெஹர் காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் பழமையான மசூதி ஒன்று, பயன்பாடற்ற நிலையில் இருந்து வருகிறது. இதன் அருகே சீக்கியர்களின் குருத்வாரா அமைந்துள்ளது.
அந்தப் பகுதியில் உள்ள நிலம் ஒன்றை இரு பிரிவினரும் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இது தொடர்பான வழக்கு பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் வெள்ளிக் கிழமை நள்ளிரவில் சர்ச்சைக் குரிய நிலத்தின் ஒரு பகுதியை சிலர் ஆக்கிரமித்து ரகசியமாக சுற்றுச்சுவர் எழுப்ப முயற்சித்த தாகக் கூறப்படுகிறது. அதற்கு மற்றொரு தரப்பினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதை அடுத்து அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
போலீஸார் வந்து சமாதானம் செய்தும் பயனில்லை, இருதரப் புக்கும் இடையே வாக்குவாதம் தொடர்ந்த நிலையில், அதிகாலை யில் கைகலப்பாக மாறி கலவரம் ஏற்பட்டது.
இரு பிரிவினரும், ஒருவரை யொருவர் கல் வீசித் தாக்கித் கொண்டனர். 100-க்கும் மேற்பட்ட கடைகளும், இருசக்கர வாகனங் களும் தீக்கிரையாகின. தீயணைப்பு அலுவலகமும் தீவைத்து எரிக்கப்பட்டது.
இந்த கலவரத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதில் 5 பேர் போலீஸார். கலவரம் தொடங்கியதும் அப்பகுதி யில் குவிக்கப்பட்ட போலீஸார், கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைக்க முயன்றனர். ஆனால், தொடர்ந்து கலவரம் நடந்ததால் ரப்பர் குண்டுகளால் துப்பாக்கிச் சூடு நடத்தினர். கலவரத்தில் காயமடைந்த மாநில காவல் துறை அதிகாரி ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளார்.
அப்பகுதியில் மாநில போலீஸா ருடன் இணைந்து மத்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து மாநில காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் முகுல் கோயல் கூறும்போது, “நிலத்தகராறு காரணமாக இரு பிரிவினரிடையே மோதல் உருவாகி உள்ளது. அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது” என்றார்.
சஹரான்பூரில் பிரச்சினைக் குரிய நிலம் அமைந்துள்ள பகுதியிலும், அதைச் சுற்றியுள்ள 6-க்கும் மேற்பட்ட பகுதிகளிலும் கலவரம் பரவி உள்ளது.
இதே போன்று கடந்த ஆண்டு முஸாபர் நகரில் ஏற்பட்ட கலவரமும் பல்வேறு பகுதி களுக்கும் பரவியது நினைவு கூரத்தக்கது.