

உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் நாட்டில் உள்ள புனித தலங்களை இணைக்கும் சுற்றுலா ரயில்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.
தேவி சுற்றுலா பாதை, ஜோதிர்லிங்க சுற்றுலா பாதை, ஜெயின் சுற்றுலா பாதை, கிறிஸ்தவ சுற்றுலா பாதை, முஸ்லிம், சூபி சுற்றுலா பாதை, சீக்கிய, புத்த சுற்றுலா பாதை என நாட்டில் உள்ள முக்கிய மத வழிபாட்டுத் தலங்களை இணைக்க ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் தனியார் துறையின் பங்களிப்பும் ஊக்குவிக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா பட்ஜெட் அறிவிப்பின்போது தெரிவித் தார். வடகிழக்கு மாநிலங்களில் கல்வி சுற்றுலாவுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கவும் திட்டமிட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலம் கதக்கில் இருந்து பாகல்கோட் வழியாக மகாராஷ்டிர மாநிலம் பந்தர்பூருக்கு சுற்றுலா ரயில் இயக்கப்படவுள்ளது.
இந்த ரயில் கர்நாடகா மகாராஷ்டிரா இடையே உள்ள முக்கிய புனித தலங்களையும் சுற்றுலா இடங்களையும் இணைக்கும்.
தமிழகத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து பெங்களூர், சென்னை, அயோத்தி, வாரணாசி, ஹரித்வாரை இணைக்கும் ரயில் இயக்கப்படவுள்ளது.
சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையையும் சேவையையும் மக்களுக்கு உணர்த்தும் வகையில் சிறப்பு ரயில் இயக்கப்பட இருக்கிறது.