Published : 12 Jan 2023 04:58 PM
Last Updated : 12 Jan 2023 04:58 PM

-4°C | வட இந்தியா இன்னொரு குளிர் அலையை எதிர்கொள்ள வாய்ப்பு: நிபுணர்கள் கருத்து

-4°C என்ற அளவுக்கு வெப்பநிலை சரியக்கூடிய சூழல் இருப்பதால் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்கள் இன்னொரு மோசமான குளிர் அலையை சந்திக்க வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளார் நவ்தீப் தஹியா என்ற வானிலை ஆய்வாளர். லைவ் வெதர் ஆஃப் இந்தியா என்ற ஆன்லைன் வானிலை தளத்தின் நிறுவனரான நவ்தீப் தனது வாழ்நாளில் இந்த அளவுக்கு வெப்பநிலை சரிந்ததை கண்டதில்லை என்று கூறுகிறார்.

ஜனவரி 14-ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரையில் வட இந்தியாவில் கடுமையான குளிர் அலை நிலவும் ஜனவரி 16 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையில் இந்த குளிர் நிலை மிக மோசமான புதிய உச்சத்தைத் தொடும். அதாவது -4°c to +2°c என்றளவில் வெப்பநிலை இருக்கக் கூடும் என்று கூறியுள்ளார்.

மலைவாசஸ்தளங்களுக்கு இணையாக டெல்லி போன்ற சமவெளிப் பகுதியில் ஏற்படவிருக்கும் இந்தக் குளிர் அலை ஆர்வத்தையும் அதே நேரத்தில் கலக்கத்தையும் ஏற்படுத்துகிறது. 21-ஆம் நூற்றாண்டு தொடங்கியதிலிருந்து 2023 ஜனவரி தான் மிகவும் குளிர்ந்த காலமாக இருக்கக் கூடும். வடக்கு, வடமேற்கு இந்தியாவில் எலும்பை சில்லிடும் குளிர் நிலவி வருகிறது.

இந்த வாரத் தொடக்கத்தில் டெல்லி சாஃப்டர்ஜங் பகுதியில் 1.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியது. தென் இந்தியாவிலும் கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. இதற்கு மூடுபனியும் காரணமாக இருக்கிறது என்றார்.

இதற்கிடையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பில், வடமேற்கு இந்தியாவில், மேற்கத்திய கலக்கம் (western disturbance) என்ற நிகழ்வால் கடுமையான குளிர் அலை நிலவுகிறது. இந்த குளிர் அலை மீண்டும் ஜனவரி 15 முதல் ஜனவரி 18 வரை அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x