

பிச்சைக்காரர் ஒருவர் ஸ்வைப் மெஷின் பயன்படுத்தும் வாட்ஸ் அப் வீடியோவை குறிப்பிட்டு பிரதமர் மோடி பணமற்ற பொருளாதாரத்திற்கு வரவேற்பு இருப்பதாக உத்தரப்பிரதேச பொதுக்கூட்டத்தில் பெருமிதத்துடன் பேசியுள்ளார்.
மொரதாபாத் கூட்டத்தில் அவர் பேசும்போது, “இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை, பிச்சைக்காரரிடம் ஒருவர் தெரிவிக்கிறார், தனக்கு உதவி புரிய விருப்பம் இருப்பதாகவும் ஆனால் ரொக்கம் இல்லை என்று கூறும்போது, பிச்சைக்காரர் அவரிடம் கவலை வேண்டாம் என்று கூறி ஸ்வைப் மெஷினை எடுத்து அந்த நபரின் டெபிட் கார்டை கொடுக்குமாறு கூறுவதாக வெளியான வாட்ஸ் அப் வீடியோ வைரலாகியுள்ளது.
நோக்கங்கள் நல்லதாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ளும் போது இந்தியர்கள் புதியவற்றை ஏற்றுக் கொள்ள காலம் தாழ்த்துவதில்லை. (கூட்டத்தில் பயங்கர சிரிப்பலை எழுந்தது)
சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகாலம் ஆகியும் மின்சாரம் இல்லாத கிராமங்கள் உள்ளன. கிராம மக்கள் டிவி பார்க்க விரும்புகின்றனர். அவர்கள் சாஸ்-பாஹு (சீரியல்) பார்க்க விரும்புகின்றனர், ஆனால் மின்சாரம் இல்லை, எப்படி அவர்கள் தங்களுக்குப் பிடித்ததைப் பார்க்க முடியும்?
பதுக்கல்காரர்களிடமிருந்து மீட்கப்பட்ட பணம் உள்கட்டமைப்பு வளர்ச்சி போன்ற மக்கள் நல திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும்.
நான் குறிப்பாக விவசாயிகளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வளவு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் விதையிடுதலை அவர்கள் பாதிப்படைய அனுமதிக்கவில்லை. எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்துபவர்கள், அவநம்பிக்கைவாத சூழலை உருவாக்குகின்றனர்.
நடவடிக்கையினால் சில பேர்வழிகளின் முகத்தில் இருந்த பளபளப்பு போய்விட்டது. முன்பு பணம் பணம் என்று கோஷமிட்டவர்கள் தற்போது மோடி மோடி என்று கோஷமிடுகின்றனர்”
இவ்வாறு கூறினார் மோடி.