

கோவாவில் இருந்து மும்பை புறப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானம் திடீரென ஓடுபாதையில் இருந்து விலகியதால் பரபரப்பு ஏற்பட்டது. விமானத்தில் இருந்தவர்களை வெளியேற்றியபோது, 15 பயணிகள் காயமடைந்தனர்.
துபாயில் இருந்து கோவா தபோலிம் விமான நிலையத்துக்கு வந்த ஜெட் ஏர்வேஸ் விமானம் (9 டபுள்யூ 2374), மும்பைக்கு புறப்படத் தயாரான சமயத்தில், நேற்று அதிகாலை 5 மணிக்கு இச்சம்பவம் நிகழ்ந்தது.
154 பயணிகள் மற்றும் 7 பணியாளர்கள் என மொத்தம் 161 பேருடன் புறப்பட்ட விமானம், திடீரென ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்றது. உடனடியாக விமானம் நிறுத்தப்பட்டது. கடற்படையைச் சேர்ந்தவர்கள் உடனடியாக விரைந்து, விமானத்தில் இருந்து பயணிகளைப் பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
பயணிகள் வெளியேறிய சமயத்தில் மீண்டும் விமானம் முன் பக்கமாக சாய்ந்தது. இதனால் பயணிகள் மத்தியில் பீதி, குழப்பமும் ஏற்பட்டது. அவசரகதியில் அனைவரும் வெளியேறியதில், 15 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக ஜெட் ஏர்வேஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டது.
மோதல் தவிர்ப்பு
இதற்கிடையே டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் டேக்ஸிவேயில் சென்று கொண்டிருந்த இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் ஒரே பாதையில் எதிரெதிர் திசைகளில் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
டெல்லி-ஹைதராபாத் இடையே இயக்கப்படும் ஸ்பைஸ் ஜெட் (எஸ்ஜி123) விமானம் நகர்ந்து கொண்டிருந்த போது, அதே பாதையில் 176 பயணிகளுடன் எதிர் திசையில் இண்டிகோ (6இ-769) (லக்னோ-டெல்லி) விமானம் வந்தது. இரு விமானங்களும் உடனடியாக கவனித்து நிறுத்தப் பட்டன. இதனால் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து விமான போக்குவரத்து ஆணையரகம் விசாரணை நடத்தி வருகிறது.