

தெலங்கானா மாநில சட்டப் பேரவைக் கூட்டத்தில் நேற்று அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சிகளைச் சேர்ந்த 11 உறுப்பினர்கள் ஒரு நாள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடரின் 2-வது நாள்கூட்டம் நேற்று பேரவைத் தலைவர் மதுசூதனாச்சாரி தலைமையில் நடைபெற்றது. இதில் பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது தங்களது கட்சி சின்னத்தில் வெற்றி பெற்ற பிறகு ஆளும்கட்சிக்கு தாவிய எம்எல்ஏக்களின் பதவியைப் பறிக்க வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
பேரவைத்தலைவர் பலமுறை எச்சரித்தும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவர்களை ஒரு நாள் பேரவையில் இருந்து இடைநீக்கம் செய்யுமாறு நீர்வளத்துறை அமைச்சர் ஹரீஷ் ராவ் முன்மொழிந்தார்.
இதையடுத்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 9 பேர், தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த 2 பேர் என மொத்தம் 11 உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்வதாக பேரவைத்தலைவர் அறிவித்தார். இதைத்தொடர்ந்து அந்த 11 பேரும் அவையை விட்டு வெளியேறினர்.