சந்தா கோச்சார், தீபக் கோச்சார் ஜாமீனில் விடுவிப்பு
மும்பை: பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார் ஆகியோர் இன்று(செவ்வாய் கிழமை) ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தபோது அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு வீடியோகான் குழுமத்துக்கு விதிகளை மீறி ரூ.3,250 கோடி கடன் வழங்கியதாக சந்தா கோச்சார் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து கடந்த மாதம் 23ம் தேதி சந்தா கோச்சாரும், தீபக் கோச்சாரும் கைது செய்யப்பட்டனர்.
சிபிஐ-யின் கைது நடவடிக்கையை எதிர்த்து சந்தா கோச்சார், தீபக் கோச்சார் தம்பதி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதோடு, ஜனவரி 15-ம் தேதி நடைபெற இருக்கிற தங்களின் மகனின் திருமணத்தில் பங்கேற்பதற்காக தங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் இருவரும் தனித்தனியாக மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய மும்பை உயர் நீதிமன்றம், இந்த கைது நடவடிக்கை சட்டப்படி நடக்கவில்லை என்று தெரிவித்தது. மேலும், இருவருக்கும் ஜாமீன் வழங்குவதாகவும், இருவரும் தலா ரூ. 1 லட்சம் நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இருவரும் தங்கள் பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். நீதிமன்ற உத்தரவுப்படி தொகை செலுத்தப்பட்டு பாஸ்போர்ட் ஒப்படைக்கப்படடது. இதையடுத்து இருவரும் இன்று விடுதலை செய்யப்பட்டனர். சந்தா கோச்சார் மும்பையின் பைகுல்லா சிறையில் இருந்தும், தீபக் கோச்சார் மும்பை ஆர்தர் சாலை சிறையில் இருந்தும் வெளியே வந்தனர்.
