

டெல்லி போலீஸாரின் புள்ளிவிவரங்களின் படி பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து உள்ளதாகவே தெரிகிறது.
கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 17-ம் நாள் தொலைகாட்சி ஊடங்கள் முக்கிய செய்தி ஒன்றை ஒளிப்பரப்பு செய்ய தொடங்கின.
டெல்லியில் ஓடும் பேருந்தில் பயணம் செய்த பயிற்சி மருத்துவ மாணவி ( நிர்பயா) கொடூரமாக தாக்கப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பேருந்திலிருந்து நிர்வாணமான நிலையில் சாலையில் வீசப்பட்டார்.
பின் போலீஸார் அவரை மீட்டு சஃபதர்ஜங் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அதனைத் தொடர்ந்து அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். எனினும் இந்தச் சம்பவம் பற்றிய விவரங்கள் இன்னமும் மேலோட்டமாகதான் உள்ளன.
இந்தச் சம்பவம் பற்றிய பிண்ணனியை போலீஸார் வெளியிட்டபோது, மிகக் கொடூரமான இந்தக் குற்றச்செயலை கண்டு மக்கள் கோபம் அடைந்தனர். போராட்டங்கள் வெடித்தது.
தலைநகரில் நடந்த இந்த பாலியல் வன்முறைக்கு எதிராக வீதியில் தானாக முன்வந்து பலர் போரட்டங்களில் ஈடுபட்டனர். போராட்டம் நடத்திய ஆர்பாட்டக்காரர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர்.
பல்வேறு இடங்களில், போரட்டங்கள் எழுச்சி அடைவதை கண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தொலைக்காட்சியில் தோன்றி அமைதிகாக்குப்படி வேண்டுகோள் விடுத்தார்.
இந்தச் சம்பவம் நடந்து நான்கு வருடங்கள் கடந்து விட்டது. இந்த சம்பவத்துக்கு பிறகு பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களுக்கு தண்டனையை கடுமையாக்கும்படி வலியுறுத்தப்பட்டது.
ஆனால் நான்கு வருடம் கடந்த பின்பு தலைநகர் டெல்லி பெண்களின் பாதுகாப்புக்கு உரிய நகரமாக மாறி இருக்கிறதா?
டெல்லி போலீஸாரின் புள்ளிவிவரங்களின் படி பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து உள்ளதாகவே தெரிகிறது.
கடந்த நான்கு வருடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளதா? என்பது பற்றி கடந்த 2012 டிசம்பர் 16-ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிர்பயாவின் தாயார் கூறும்போது, "எதுவுமே மாறவில்லை. சட்டங்கள் எதிர்பார்த்த அளவு வலிமையாக செயல்படவில்லை. டெல்லியில் பாதுகாப்பற்ற சூழலில்தான் இளம் பெண்கள் உள்ளனர்" என்றார்.
டெல்லி ஆர்.கே.நகரைச் சேர்ந்த அழகு நிலையம் பணியாளர் வந்தனா தத் கூறும்போது, "நான் பணி முடிந்ததும் தனியாக வீட்டுக்குச் செல்வதில்லை. எனது சகோதரர்தான் தினம்தோறும் அழைத்து செல்கிறார்" என்று கூறினார்.
நிர்பயா நிதி
கடந்த 2013-ல் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் நிர்பயா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன்படி பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணத் தொகையாக நிர்பயா நிதியில் வைப்பில் இருக்கும் தொகையில் குறிப்பிட்ட அளவு சென்றடைய வேண்டும்.
ஆனால் அந்த நிதியை பயன்படுத்துவதில் அரசு அத்தனை சுணக்கம் காட்டி வருகிறது. இதைச் சுட்டிக்காட்டி மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தை நாடாளுமன்ற நிலைக் குழு கடுமையாக சாடியதை மறக்க முடியாது.
4 ஆண்டுகள் ஆன நிலையில் டெல்லியில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்பதற்கு வியாழக்கிழமை இரவுகூட டெல்லியில் பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவமும் ஒரு சாட்சி.