

பண மதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட 50 நாட்கள் முடிந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார்.
கறுப்புப் பணத்தை ஒழிப்பதாகக் கூறி, புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் கடந்த நவம்பர் 8-ம் தேதி நள்ளிரவு முதல் தடை செய்யப்பட்டன. கையிருப்பில் கரன்சி நோட்டுகளை டிசம்பர் 30-ம் தேதி வரை வங்கிகளில் செலுத்த அவகாசம் வழங்கப்பட்டது.
இந்த நடவடிக்கையால் ஏற்படும் சிரமங்களை பொதுமக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்றும், 50 நாட்களுக்குப் பிறகு பணத் தட்டுபாடு மற்றும் இதர சிரமங்கள் குறையும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார்.
50 நாள் கெடு முடிந்துவிட்ட நிலையில், வரும் நாட்களில் ஏடிஎம் மையங்கள் வழக்கம் போல செயல்படத் தொடங்குமா, வங்கிகளில் கட்டுப்பாடுகள் இன்றி பணப் பட்டுவாடா செய்யப்படுமா என்ற கேள்விகள் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளன.
இதுகுறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கவும், புத்தாண்டு தினத்தையொட்டியும், பிரதமர் நரேந்திர மோடி 31-ம் தேதி உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் எனக் கோரி, முக்கிய கேள்விகளை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி முன்வைத்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பதில் ராகுல், “நவம்பர் 8-ம் தேதிக்குப் பிறகு பறிமுதல் செய்யப்பட்ட கறுப்புப் பணத்தின் மதிப்பு எவ்வளவு? பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் நாட்டுக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பு எவ்வளவு? எத்தனை பேர் வேலை இழந்தனர்?
பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் எத்தனை பேர் இறந்தனர்? அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட்டதா? 500, 1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்வது குறித்து யார் யாரிடம் பிரதமர் விவாதித்தார்? நிபுணர்கள், ரிசர்வ் வங்கியிடம் ஏன் கலந்தாலோசிக்கவில்லை?
நவம்பர் 8-ம் தேதிக்கு முந்தைய 6 மாத காலத்தில், வங்கிக் கணக்குகளில் ரூ.25 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தவர்கள் யார்? இந்த கேள்விகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பதில் சொல்லியாக வேண்டும்”, என்று கேட்டுள்ளார்.