Published : 09 Jan 2023 05:19 AM
Last Updated : 09 Jan 2023 05:19 AM

ஐக்கிய நாடுகள் சபை சார்பில் சூடானில் இந்திய பெண் போலீஸ் படை முகாம்

ஐ.நா. அமைதிப் படை சார்பில் சூடானின் அப்யேய் சிறப்பு பகுதியில் முகாமிட்டுள்ள இந்திய போலீஸ் படை.

நியூயார்க்: கிழக்கு ஆப்பிரிக்காவில் சூடான் உள்ளது. இங்கிலாந்தும் எகிப்தும் இணைந்து அந்த நாட்டை ஆட்சி செய்து வந்தன. கடந்த 1956-ம் ஆண்டில் சூடான் விடுதலை அடைந்தது. அதன்பிறகு வடக்கு சூடான் பகுதி மக்களுக்கும் தெற்கு சூடான் பகுதி மக்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த 2011-ம் ஆண்டில் தெற்கு சூடான் தனிநாடாக உதயமானது.

சூடான் மற்றும் தெற்கு சூடான் எல்லையில் அப்யேய் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியை இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. ஐ.நா. சபையின் சமரசத்தின் காரணமாக அப்யேய் பகுதி சிறப்புப் பகுதியாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் ஐ.நா. அமைதிப் படைபாதுகாப்புப் பணியை மேற்கொண்டு வருகிறது. அங்கு முகாமிட்டுள்ள ஐ.நா. அமைதிப் படையில் 315 இந்திய வீரர்கள் உள்ளனர். இந்த சூழலில் சூடானின் அப்யேய் சிறப்பு பகுதியின் காவல் பணிக்காக இந்திய பெண் போலீஸ் படை அனுப்பப்பட்டு உள்ளது. இதில் 125 பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.

இதுகுறித்து ஐ.நா. சபை வெளியிட்ட அறிக்கை:

ஐ.நா. அமைதிப் படையில் பெண்களின் தேவை அதிகமாக உள்ளது. குறிப்பிட்ட சில நாடுகள் மட்டுமே அமைதிப் படைக்கு பெண் வீராங்கனைகளை அனுப்பி உதவுகின்றன. அந்த வகையில் கடந்த 1960-ம் ஆண்டு முதல் ஐ.நா. அமைதிப் படைக்காக பெண் வீராங்கனைகளை இந்தியா அனுப்பி வருகிறது. கடந்த 2007-ம் ஆண்டில் இந்தியா சார்பில் ஐ.நா. அமைதிப் படையில் பெண் போலீஸ் படை சேர்க்கப்பட்டது. இதுதான் ஐ.நா.வின் முதல் பெண் போலீஸ் படை.

இந்த படை லைபீரியாவில் காவல் பணியை மேற்கொண்டது. அதன்பிறகு பல்வேறு நாடுகளில் திறம்பட பணியாற்றியது. தற்போது சூடானின் அப்யேய் பகுதியில் இந்திய பெண் போலீஸ் படை முகாமிட்டு காவல் பணியை தொடங்கியுள்ளது.

ஐ.நா. அமைதிப் படை சார்பில் சூடான் மட்டுமன்றி பல்வேறு அமைதி திட்டங்களில் இந்திய வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும் இந்திய மருத்துவர்கள், கால்நடை மருத்துவர்களும் அர்ப் பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகின்றனர். உலக அமைதிக்காக ஏராளமான இந்திய வீரர்கள் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். 1948-ம் ஆண்டு முதல் இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் ஐ.நா. அமைதிப் படையில் சேவையாற்றி உள்ளனர்.

இவ்வாறு ஐ.நா. அறிக்கையில் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில், “ஐ.நா.அமைதிப் படை சார்பில் சூடானின்அப்யேய் பகுதியில் இந்திய பெண் போலீஸ் படை வெள்ளிக்கிழமை முதல் சேவையை தொடங்கி உள்ளது. இந்தியாவின் பெருமையை அவர்கள் நிலைநாட்டுவார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x