பள்ளி மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்: விருப்பமுள்ளவர்கள் பங்கேற்க பாஜக அழைப்பு

பள்ளி மாணவர்களுடன் பிரதமர் மோடி | கோப்புப்படம்
பள்ளி மாணவர்களுடன் பிரதமர் மோடி | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: ஜனவரி 27-ம் தேதி நடைபெறும் ‘தேர்வும் தெளிவும்’ நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார். விருப்பமுள்ள பள்ளி மாணவர்கள் பங்கேற்குமாறு தமிழக பாஜக அழைப்பு விடுத்துள்ளது.

தேர்வு நேரத்தில் மாணவர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தத்தையும், பயத்தையும் போக்கி, துணிவுடன் தேர்வை எதிர்கொள்ளும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி, 2018-ம்ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் ‘தேர்வும் தெளிவும்’ என்ற பெயரில், மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்தி வருகிறார்.

இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி மூலம் மாணவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதோடு, எப்படி மன அழுத்தம் இல்லாமல் தேர்வு எழுதுவது என்பது குறித்தும் ஆலோசனைகளைப் பெற்று வருகின்றனர்.

பிரதமரின் ஆலோசனைகள்

மேலும், பிரதமர் மோடி எழுதிய ‘தேர்வு மாவீரர்கள்’ என்ற புத்தகத்தில் மாணவர்களுக்கு 28 ஆலோசனைகளையும், பெற்றோருக்கு 6 ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார். மேலும், அந்த புத்தகத்தில் தனது அனுபவங்களையும் வழங்கியுள்ளார். இந்த புத்தகத்தை மாணவர்களுக்கு, பெற்றோர்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியில் பாஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ‘தேர்வும் தெளிவும்’ நிகழ்ச்சியின் முதற்கட்டமாக ஜனவரி 20-ம் தேதி மாலை மாணவ, மாணவிகளுக்கு ஓவியப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதைத் தொடர்ந்து, 27-ம் தேதி மாணவர்களுடன் பிரதமர் மோடியின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

இந்நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கவும், வழிநடத்திச் செல்லவும் மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.என்.எஸ்.பிரசாத் தலைமையில் பாஜக கல்வியாளர் பிரிவு மாநில தலைவர் தங்க கணேசன், மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.சவுந்தரராஜன், முன்னாள் மாநிலச் செயலாளர் நந்தகுமார் ஆகியோர் அடங்கிய மாநில அளவிலான குழுவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அமைத்துள்ளார்.

9 முதல் 12-ம் வகுப்பு வரை

அந்த வகையில் அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்களுக்கான ஓவியப் போட்டிக்கான ஏற்பாடுகளைத் தமிழக பாஜகவினர் செய்து வருகின்றனர். 9 முதல் 12-ம் வகுப்புவரையிலான 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் பங்குபெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டியில் ஆர்வமுள்ள பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளலாம் என பாஜக அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் கடிதங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

நிகழ்ச்சி குறித்த விவரங்கள் ‘நமோ செயலி’ மூலம் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். மேலும், https://innovateindia.mygov.in/ppc-2023 என்ற இணையதளத்தின் மூலம் மாணவர்கள் போட்டியில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டியில் வெற்றி பெறும் வெற்றியாளர்கள், ஜனவரி 27-ம்தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் மோடியுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கலாம். நிகழ்ச்சிகளை மாணவர்கள் காண அனைத்து பள்ளிகளிலும் பெரிய திரைகள் அமைக்கப்பட இருக்கின்றன. இதில் பெற்றோர்களும் பங்கு பெறலாம் என தமிழக பாஜக கல்விப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in