

"மோடியின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் நம் நாடு தேசிய பேரிடர் நோக்கிச் செல்கிறது" என்று முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி குற்றம்சாட்டினார்.
பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் காங்கிரஸ் கட்சியினர் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் பங்கேற்றுப் பேசிய ஏ.கே.அந்தோணி, "பிரதமர் மோடியின் முடிவால் இந்தியாவே தேசிய பேரிடர் நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. மோடி செய்தது மக்களால் மன்னிக்க முடியாத நடவடிக்கை. இது, தங்கள் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கிக் கொள்வதற்கான பதுக்கல்காரர்களுக்கு வழங்கப்பட்ட மற்றொரு வாய்ப்பு மட்டுமே.
இந்த நடவடிக்கையின் மூலம், வேளாண் மற்றும் கூட்டுறவு வங்கிகள் துறையில் மாநிலங்களை பாரபட்சத்துடன் மத்திய அரசு அணுகி வருகிறது" என்று அவர் குற்றம்சாட்டினார்.
அதையடுத்து பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான முகுல் வான்சிக், "பிரதமர் மோடியை மக்கள் ஜனநாயக ரீதியில் தண்டிக்க வேண்டும்" என்றார்.
கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா பேசும்போது, "கேரள மாநிலமே பொருளாதார பேரிடரை சந்தித்து வருகிறது. அங்கு வசிக்கும் பிற மாநிலத்தவர்கள் தங்களது பணத்தை கூட்டுறவு வங்கிகளில் இருப்பு வைக்கவே அஞ்சுகின்றனர்" என்றார்.