விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த வழக்கு - பெங்களூருவில் ஷங்கர் மிஸ்ரா கைது

ஷங்கர் மிஸ்ரா
ஷங்கர் மிஸ்ரா
Updated on
1 min read

பெங்களூரு: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து டெல்லிக்கு கடந்த நவ. 26-ம் தேதி வந்த ஏர் இந்தியா விமானத்தில் 72 வயது பெண்மணி ஒருவர் பயணித்தார். அவருடன் அதே விமானத்தில் பயணித்த ஷங்கர் மிஸ்ரா (32), 72 வயதான பெண் பயணி மீது சிறுநீர் கழித்தார். முதலில் இப்பிரச்சினை இருதரப்பினர் இடையே பேசி தீர்க்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், இதுகுறித்து அந்தப் பெண்மணி, டாடா குழும தலைவர் என்.சந்திரசேகரனுக்கு கடிதம் எழுதினார்.

இதற்கு ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கேம்ப்பெல் வில்சன் பதில் அனுப்பினார். அதில் ‘‘இச்சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது. இதை எங்களது பணியாளர்கள் இன்னும் சரியாக கையாண்டிருக்க வேண்டும். இதற்காக ஒரு விமானி,4 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். விமானங்களில் மது விநியோகிக்கும் நடைமுறையை மறுபரிசீலனை செய்கிறோம். ஷங்கர் மிஸ்ராவை அடுத்த 30 நாட்களுக்கு ஏர் இந்தியா விமானத்தில் பறக்க தடை விதித்துள்ளோம்’’ என கூறியிருந்தார். ஷங்கர் மிஸ்ரா பணியாற்றி வந்த அமெரிக்க நிதி சேவை நிறுவனமான 'வெல்ஸ் போர்கோ' அவரை பணி நீக்கம் செய்துள்ளது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த டெல்லி போலீஸார் மும்பையை சேர்ந்த ஷங்கர் மிஸ்ராவை கைது செய்ய 4 தனிப்படை அமைத்தது. கடைசியில் செல்போன் சிக்னல் மூலமாக அவர் பெங்களூருவில் இருப்பதை கண்டறிந்தனர்.

வெள்ளிக்கிழமை இரவு ஒயிட் ஃபீல்டில் உள்ள அவரது சகோதரியின் வீட்டில் ஷங்கர் மிஸ்ரா பதுங்கி இருந்த போது போலீஸார் அவ‌ரை கைது செய்தனர். பின்னர் விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்து சென்று நேற்று பிற்பகலில் பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அங்கு ஷங்கர் மிஸ்ரா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மனு ஷர்மா, ''ஷங்கர் மிஸ்ரா உடல்நிலையை கருத்தில் கொண்டு இவ்வழக்கில் ஜாமீன் அளிக்க வேண்டும்'' என கோரிக்கை விடுத்தார். இதற்கு அரசு த‌ரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் அவரை 3 நாட்கள் போலீஸார் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என கோரினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அனாமிகா, ‘‘ஷங்கர் மிஸ்ரா விசாரணைக்கு ஒத்துழைக்காமல் தலைமறைவாக இருந்துள்ளார். எனவே அவருக்கு ஜாமீன் அளிக்க முடியாது.அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடுகிறேன்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in