நாடாளுமன்றத் துளிகள்: பள்ளிகளில் தேசிய கீதம் கட்டாயமா?

நாடாளுமன்றத் துளிகள்: பள்ளிகளில் தேசிய கீதம் கட்டாயமா?
Updated on
1 min read

மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பல்வேறு விவகாரங்கள் குறித்து உறுப்பினர்கள் நேற்று முன்வைத்த கேள்விகளுக்கு அமைச்சர்கள் அளித்த பதில்களின் சுருக்கமான தொகுப்பு:

உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீடு

மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்:

கடந்த 2013-14 நிதியாண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.34 சதவீதம் உயர் கல்வித் துறைக்கான பொது செலவினங்களுக்கு ஒதுக்கப்பட்டது. 11-வது ஐந்தாண்டு திட்டத்தில் உயர் கல்விக்கு, ரூ.39,646.82 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் உயர் கல்வித் துறைக்கு, ரூ.1,10,700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது, 2.79 சதவீத உயர்வாகும்.

சாலை விபத்து: 1.46 லட்சம் பேர் பலி

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை இணை அமைச்சர் மன்சுக் என் மண்டாவியா:

2015-ம் ஆண்டில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 1,46,133 பேர் உயிரிழந்தனர். 5,00,279 பேர் காயமடைந்தனர். 2014-ல் நிகழ்ந்த சாலை விபத்துகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை, 4,93,474 ஆகும்.

கடந்த, 2014-ல் 4,89,400 சாலை விபத்துகள் நிகழ்ந்த நிலையில், கடந்தாண்டு இந்த எண்ணிக்கை, 5,01,423-ஆக அதிகரித்துள்ளது. 2011, 2013-களில் சாலை விபத்து மற்றும் உயிரிழப்புகள் குறைந்து காணப்பட்டன. 2014-ல் இந்த எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.

நகரில் 41,140 பெட்ரோல் நிலையங்கள்

மின் துறை அமைச்சர் பியுஷ் கோயல்:

நாடு முழுவதும், 53,221 பெட்ரோல் நிலையங்கள் உள்ளன. இதில், 41,140 பெட்ரோல் நிலையங்கள் நகர்ப்புறங்களில் அமைந்துள்ளன. 12,081 பெட்ரோல் நிலையங்கள் கிராமப்புறங்களில் உள்ளன.

பெட்ரோலிய பைப்லைன் அமைப்பதற்காக, 33 திட்டங்கள் கட்டமைப்பு நிலையில் உள்ளன. இத்திட்டங்களின் கீழ்வரும் பைப்லைன்களின் மொத்த தொலைவு, 14,880 கி.மீ. ஆகும்.

பள்ளிகளில் தேசிய கீதம் கட்டாயமா?

மனிதவள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் உபேந்திர குஷ்வாஹா:

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் தேசிய கீதம் பாடப் படுவது கட்டாயம் என்று மத்திய அரசு பரிந்துரை செய்யவில்லை. இந்த விவகாரத்தில் அந்தந்த மாநில அரசுகளே முடிவெடுத்துக் கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in