

டெல்லி மாநில சுகாதாரத் துறையின் ஆலோசகராக, அத்துறையின் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மகள் சவுமியா நியமிக்கப்பட்டார். இதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறி, விசாரணை நடத்தும்படி சிபிஐ அதிகாரிகளுக்கு ஆளுநர் மாளிகை சார்பில் பரிந்துரை செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் சிபிஐ தரப்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் பாஜக தலைவர் விஜேந்தர் குப்தாவும், ஆம் ஆத்மி அரசால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து பணி நியமனங்களையும் விசாரிக்க உயர் மட்ட குழு அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதனால் ஆவேசமடைந்த டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தங்கள் அரசு மீதான அனைத்து விசாரணைகளையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும், அதேபோல் சகாரா, பிர்லா ஊழல் வழக்கு விசாரணைகளை எதிர்கொள்ள மத்திய அரசு தயாரா? என்றும் தன் ட்விட்டர் பக்கத்தில் சவால் விடுத்துள்ளார்.
மேலும் அவர், ‘‘சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு எதிராக சிபிஐ தரப்பில் 7 வழக்குகளும், மணிஷ் சிசோடியாவுக்கு எதிராக இரு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சகாரா, பிர்லா நிறுவனங் களிடம் இருந்து லஞ்சம் பெற்றுக் கொண்டு, நேர்மையான வர்களுக்கு எதிராக பிரதமர் மோடி இந்த வழக்குகளைப் பதிவு செய்திருக்கிறார்’’ என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.