பிஹாரில் சாதிவாரி கணக்கெடுப்பு ஆரம்பம்: முதல்வர் நிதிஷ் குமார் தொடங்கிவைத்தார்

நிதிஷ் குமார் | பிஹார் முதல்வர்
நிதிஷ் குமார் | பிஹார் முதல்வர்
Updated on
1 min read

பாட்னா: பிஹாரில் சாதிவாரி கணக்கெடுப்பு இன்று (ஜன்.7) தொடங்கியது. இதனை தொடங்கிவைத்த முதல்வர் நிதிஷ் குமார், இந்த கணக்கெடுப்பின் மூலம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பலன் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

பிஹாரில் சாதிவாரி கணக்கெடுப்பு இன்று தொடங்கியது. தலைநகர் பாட்னாவில் முதல்வர் நிதிஷ் குமார் இதனை தொடங்கிவைத்தார். அப்போது பேசிய அவர், ''சாதிவாரி கணக்கெடுப்பு மூலம் அனைவருக்கும் பலன் கிடைக்கும். மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களுக்கு உதவும் நோக்கில் அரசு செயல்பட இது உதவும். கணக்கெடுப்புப் பணி நிறைவடைந்ததும் அந்த தகவல்கள் மத்திய அரசுக்கும் அனுப்பிவைக்கப்படும். ஒவ்வொரு மதத்திலும் ஒவ்வொரு சாதியிலும் இருப்பவர்கள் எவ்வளவு பேர் என்ற விவரம் இதன் மூலம் திரட்டப்படும். இதற்கான பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.'' என தெரிவித்துள்ளார்.

சாதிவாரி கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட்டதை அடுத்து, இதற்கான பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள், வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட கணக்கெடுப்பு இன்று தொடங்கி வரும் 21ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முதல் கட்ட கணக்கெடுப்பில் மாநிலம் முழுவதும் உள்ள வீடுகளின் எண்ணிக்கை குறித்த விவரம் சேகரிக்கப்படும்.

இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, மக்களின் சாதி, துணை சாதி, மதம், பொருளாதார நிலை ஆகியவை குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளன. இந்த பணிகளை மேற்கொள்ள மாநில அரசு ரூ. 500 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. பணிகளை வரும் மே மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த கணக்கெடுப்பு பணிக்காக மொபைல் செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதில் பல்வேறு கேள்விகள் இடம் பெற்றுள்ளதாகவும் அந்த கேள்விகள் கேட்கப்பட்டு விவரங்கள் டிஜிட்டல் வடிவில் சேகரிக்கப்படும் என்றும் பாட்னா மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சிங் தெரிவித்துள்ளார். பள்ளி ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் ஆகியோர் இந்த கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பில் மக்களின் மதம் மற்றும் பட்டியல் சாதி மக்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. பிற சாதிகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படுவதில்லை. இந்நிலையில், பிஹாரில் முதல்முறையாக சாதி வாரி கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in