

உத்தரப் பிரதேசத்தின் முசாஃபர்நகரில் உள்ள வங்கி ஒன்றில், தங்கள் பணத்தை எடுக்க முடியாததால் ஆவேசம் அடைந்த வாடிக்கையாளர்கள் 20 பேர் கூட்டாக சேர்ந்து மேலாளரரைத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக உத்தரப் பிரதேச போலீஸ் தரப்பு கூறும்போது, 'ஜாசோய் கிராமத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் மேலாளர் அனில் குமார் நேற்று தன்னை 20 பேர் கூட்டாக தாக்கியதாக புகார் அளித்தார். அதன் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
அந்தப் புகாரின் அடிப்படையில், அடையாளம் காணப்பட்ட 4 பேர் உட்பட 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வங்கி அலுவல்களுக்கு இடையூறு செய்தததுடன், அங்கியிருந்த அதிகாரியைத் தாக்கியதாக அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது' என்றனர்.
இதேபோல், சர்தவால் என்ற கிராமத்தில் உள்ள ஏடிஎம்கள் மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கிளையில் பணம் இல்லாததால், ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வங்கிகளில் பணத்தட்டுப்பாடு காரணமாகவே மக்கள் ஆவேசமடைந்து போராட்டத்தில் ஈடுபட்டதாக போலீஸ் தரப்பும் தெரிவித்துள்ளது. இதையடுத்து, மக்கள் போராட்டம் மேற்கொள்ளும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்து ஒரு மாதம் நிறைவாகியுள்ள நிலையிலும் வங்கி, ஏடிஎம்களில் பணத் தட்டுபாடு தீரவில்லை. இதனால், நாடு தழுவிய அளவில் பொதுமக்கள் அவதிப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.