Last Updated : 14 Dec, 2016 07:59 PM

 

Published : 14 Dec 2016 07:59 PM
Last Updated : 14 Dec 2016 07:59 PM

பணமற்ற பொருளாதாரம்: பிரதமரின் மாறும் பிரச்சார உத்தியும் பின்னணியும்

பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் ஆரம்ப காலக்கட்டங்களில் கறுப்புப் பணம் ஒழிப்பு என்று ஆளும் பாஜக மற்றும் அரசு எந்திரங்கள் தொடர் பிரச்சாரவலை விரித்தது, தற்போது அது பின்னுக்குத் தள்ளப்பட்டு ‘பணமற்ற பரிவர்த்தனை’ என்ற கதையாடல் பிரச்சார பலம் பெற்றுள்ளது.

நவம்பர் 8-ம் தேதி நோட்டுத் தடை அறிவிப்புக்குப் பிறகு குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் என்னவெனில் நடவடிக்கையை நியாயப்படுத்தும் கதையாடல் கறுப்புப் பண ஒழிப்பு என்பதிலிருந்து பணமற்ற பரிவர்த்தனை என்பதாக மாறியிருப்பதே.

கறுப்புப் பணம், பயங்கரவாத நிதி, கள்ள நோட்டு ஆகியவற்றிற்கு எதிரான ‘துல்லியத் தாக்குதல்’ என்று பிரச்சாரிக்கப்பட்ட சொல்லாடல்கள் தற்போது ரொக்கமற்ற பரிவர்த்தனை என்ற வேரடி சீர்த்திருத்த பாவனை பெற்றுள்ளது. இந்தப் பிரச்சாரத்தை பெரிய அளவில் ஒலிபெருக்கி விளம்பரப்படுத்தும் திட்டமும் நடவடிக்கைகளும் ஏற்கெனவே நடைமுறைக்கு வந்து விட்டன. இதனைக் கொண்டே பணமற்ற பொருளாதாரம் என்ற மிகப்பெரிய தேசியக் கருத்தொற்றுமையை கட்டமைக்க தீவிரமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

‘பிரதமரின் கேஷ்லெஸ் கி பாத்’

பிரதமரின் நவம்பர் 27-ம் தேதி மன் கீ பாத் வானொலி உரையில் இத்தகைய கதையாடல் மாற்றம் நிகழ்ந்துள்ளது. மிகவும் நுட்பமான தகவல் பரிமாற்ற உத்தியைக் கையாண்டு அதிசூட்சமமாக அதனை பேசிய பிரதமர் இந்து மனக் கற்பனா வெளியில் ‘தூய்மை மற்றும் சுத்தம்” என்பதுடன் “தூய்மை மற்றும் நேர்மை’ என்பதை சமனப்படுத்தும் புதிய சமன்பாட்டை நிறுவியுள்ளார். இதன் மூலம் பணம்/பணமற்ற என்ற எதிர்நிலைக்கு ஒரு நீதிபோதனை சார்ந்த வண்ணமடித்துள்ளார்.

இந்தியப் பொருளாதாரம் என்பது 90% ரொக்கத்தில் நடைபெறுவதே. இது முறைசாரா அல்லது வெகுஜன பொருளாதார நடவடிக்கைகளினால் விளைந்தது. இந்த வெகுஜன் பொருளாதாரம் அல்லது இணை பொருளாதாரம் என்பதில்தான் 90% தொழிலாளர்கள் உள்ளனர். இந்தப் பெரும்பான்மையினர் கறுப்புப் பணம் பதுக்குபவர்கள் அல்லர். இந்த மாபெரும் வெகுஜன பொருளாதாரப் பிரிவில் உள்ளவர்கள் மின்னணு பரிவர்த்தனை முறைக்கு மாற்றம்பெறாமல் பணமற்ற சமுதாயம் சமைக்க முடியாது.

சாதுரியமாகப் பேசுவதில் வல்லவரான மோடி, பணமற்ற பொருளாதாரத்தை நோக்கிய இத்தகைய வலுக்கட்டாய, வற்புறுத்தும், பலவந்த மாற்றம் உருவாக்கும் எதிர்ப்புகளை முன் கூட்டியே அடக்கி ஒடுக்க பணமற்ற பொருளாதாரத்திற்கான பிரச்சாரத்தை சூசகமாக கறுப்புப் பணம், ஊழல் ஆகியவற்றுக்கு எதிரானதாக கூறிவருகிறார். சட்டபூர்வமான பணத்திற்கும் கறுப்புப் பணத்திற்கும் உள்ள பெரிய வித்தியாசத்தை ஒன்றுமில்லாமல் அடித்து வெள்ளை என்று நிரூபிக்கப் படாத அனைத்து ரொக்கமும் கறுப்பே எனும் விதத்தில் கையாள பாதை வகுத்துள்ளார்.

வேறொரு வார்த்தையில் கூற வேண்டுமென்றால் வெகுஜன பொருளாதார நடவடிக்கை அல்லது முறைசாரா துறையை வேண்டுமென்றே நோக்கத்துடன் குறிவைத்துதான் இந்த நோட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது வேறு ஏதோ ஒரு நல்லெண்ணத்தின் பக்கவிளைவு அல்ல. 90% தொழில்சக்தி பிழைத்து வரும் வெகுஜன பொருளாதாரத்திற்கு எதிராகத்தான் நோட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி கவர்னர் கூறுவதை இதற்கு ஒரு எளிய சுயதேற்றமாகக் கொள்ளலாம். அவர், நோட்டு நடவடிக்கையின் விளைவுகளை அரசு முழுதும் அறிந்தே செயல்படுகிறது, சிலர் கூறுவது போல் இது திட்டமிடாத நடவடிக்கை அல்ல என்றார். எனவே திட்டமிட்ட நடவடிக்கை என்பது 90% தொழில்சக்தி கொண்ட வெகுஜனப் பொருளாதாரத்துறையை குறிவைத்து மேற்கொள்ளப்பட்டதே.

உள்ளடக்க பொருளாதாரத்தில் பணம் என்பது ஒரு சக்திவாய்ந்த சாதனமாகும். யார் வேண்டுமானாலும் நேரடியாக ரொக்கத்தைக் கையாளலாம். தொழில்நுட்ப உதவி தேவையில்லை, நிதி இடையீடுகள் தேவையில்லை. ஒரு முறை பணம் கையில் வந்து விட்டால் அதனை யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும், எந்த அளவில் வேண்டுமானாலும், யாரும் தடம் காண முடியாதபடி செலவு செய்யலாம். இத்தகைய சுதந்திரங்களையும் உரிமைகளையும் நாம் உத்தரவாதமாக எடுத்து கொள்பவையாகும். இத்தகைய சுதந்திரங்கள் ஒரு நெருக்கடிக்குள்ளாகும் போது அவர்களுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு எதிர்ப்பு கிளம்புகிறது. ரொக்கமற்ற பொருளாதாரத்தில் கொடுக்கப்பட்ட ஒன்று இந்த இழப்புதான்.

இங்குதான் ஆளும் மத்திய அரசின் சொல்லாடல் வலைப்பின்னலை புரிந்து கொள்ள வேண்டும்.

முதற்கட்டமாக பண மதிப்பு நீக்க நடவடிக்கை கறுப்புப் பண ஒழிப்பிற்கான நடவடிக்கையே என்பதை பொதுமக்கள் நினைவில் விதைப்பது.

இரண்டாவது கட்டத்தில் கறுப்புப் பண ஒழிப்பு என்ற சொல்லாடலைக் கொண்டு பணமதிப்பு நீக்க சொல்லாடலில் ‘தேசத்தின் கவுரவம்’ என்பதை நுழைப்பது, பிறகு பணமற்ற பரிவர்த்தனை என்பது சுத்தமானது, தூய்மையானது என்றும் பணம் என்பது தூய்மையற்றது, அழுக்கு என்றும் இதன் மூலம் தூய்மையற்ற அழுக்கு பணம் கறுப்புப் பணம் என்றும் மக்கள் நினைவில் சொல்லாடல் மூலம் விதைப்பது.

எனவே ரொக்கமற்ற அல்லது பணமில்லாத நாடாகும் இந்தியா என்ற ஒரு கற்பனாவாத மாயா நல்லுலகத்தை சொல்லாடல் மூலம் கட்டமைத்து, யாரேனும் பணம் பயன்படுத்துவதை வலியுறுத்தினால் அது அழுக்கு, தூய்மையற்றது, தூய்மையற்ற உள்ளம் கொண்டவர் எனவே சந்தேகத்திற்கிடமானவர் - கறுப்புப் பணத்தினால் பயனடைபவர் மற்றும் கறுப்புப் பணத்துடன் கூடவே சேர்ந்துள்ள களங்கங்களை ஏற்றி விரும்பத்தகாத, விரும்பக்கூடாதவர்களாக கட்டமைக்கலாம்.

தனது மன் கீ பாத் வானொலி உரையின் முடிவில் மோடி பணமற்ற பொருளாதாரத்தை தூய்மை இந்தியாவுடன் ஒப்பிட்டார்.

ஏன் பணமில்லாத நாடாக வேண்டும்?

ஒரு கேள்வி எழுவது நியாயம். பணமற்ற சமுதாய நோக்கிய இத்தனை அவசரம் இப்போது ஏற்பட்டது ஏன்?

இதற்கு சாத்தியமாகக் கூடிய பதில்களை யோசித்தோமானால், உடனடியான விளைவு என்னவெனில், மறைமுக வரியை அதிகப்படுத்தலாம். வர்த்தகர்கள், சிறுவணிகர்கள், கடை நடத்துபவர்கள் மற்றும் நுகர்வோர்கள் விற்பனை வரி, சேவை வரி, மதிப்புக்கூட்டு வரி (வாட்), இன்னபிற மறைமுக வரிகளை ரொக்க நடவடிக்கைகள் மூலம் தவிர்த்து வருகின்றனர். புதிதாக அமல்படுத்தப்படவுள்ள ஒற்றைச்சாளர ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை உண்மையில் வேலை செய்யவேண்ட்மெனில் மேற்கூறிய மன நிலை மாற வேண்டும். ஆகவே 86% புழக்கத்தில் உள்ள நோட்டுகளை அமைப்பிலிருந்து அராஜகமாக வாபஸ் பெற்று விட்டால், சிலநாட்களுக்கு பணமின்றி மக்கள் தவிக்கவிடப்பட்டால், டிஜிட்டல் உள்ளிட்ட மாற்று வடிவங்களுக்குத் திரும்புவர்.

எனவே அரசைத் தவிரவும் ரொக்கமற்ற பரிவர்த்தனை, பணமற்ற பொருளாதாரம் என்பதன் அடுத்த மிகப்பெரிய பயனாளர் யாரெனில் நிதிமூலதனத்துறையே. தற்போது இந்தியாவின் குறைந்த வருவாய் குடும்பங்கள் வட்டிக்குக் கடன் வாங்குகின்றன. பான் புரோக்கர்களோ அல்லது வேலை செய்யும் இடத்திலோ, அல்லது பணம் சேமித்து வைத்துள்ள உறவினர்களிடமிருந்தோ கடன் பெறுகின்றனர். இத்தகைய நடவடிக்கை, முறைசார்ந்த கடனைப் பெற கூடிய சுய-உதவிக் குழுக்களின் வருகையால் பகுதியளவில் முடக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய மக்கள்தொகையை வைத்துப் பார்க்கும் போது இந்திய தொழிலாள வர்க்கத்தினரின் கடன் மற்றும் சேமிப்புகள் ஒரு மிகப்பெரிய சந்தை, இதனை உலக நிதி நிறுவனங்கள் இன்னமும் கைகொள்ள முடியவில்லை, அணுக முடியவில்லை.

எனவே ரொக்கமற்ற நடவடிக்கைகளுக்கு இவர்களை வலுக்கட்டாயமாக மாற்றுவதன் மூலம் இந்த வெகுஜன/முறைசாரா உலகத்தை உடனடியாக முறைசார் சந்தை அரங்கத்திற்குள் கொண்டு வர முடியும். நம் பிரதமரே நிறைய முறை திரும்பத் திரும்ப வலியுறுத்தியதென்னவெனில் ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் பெரிய அளவில் வங்கிக் கணக்குகளை தொடங்கியது நிதியளவில் உள்ளடக்க உத்தி என்பதே. ஆனால் இதுவல்ல விஷயம், மாற்றி யோசித்தோமானால், சொந்த வருவாய் (ஊதியங்கள்/ பணப்பரிவர்த்தனைகள்) என்பதை காப்பீடு, ஓய்வூதியத் திட்டம் (பிரதம மந்திரி சுரக்‌ஷ யோஜனா, அடல் பென்ஷன் யோஜனா) மூலமாக நிதிச்சந்தைகளுக்கு திருப்பி விடுவதே. வலுக்கட்டாய டெபாசிட்டுகளுக்கு நன்றி!! பணம் என்பது உண்டியல் சேமிப்பாகவோ, பிற ரொக்க சேமிப்பாகவோ இல்லாமல் ஜன் தன் கணக்குகள் மூலம் நிதிமூலதனத் துறைகளுக்கு ஒரு புதிய நிதி ஆதாரமாகி விடுகின்றன.

ரொக்கமற்ற சமுதாய சமைப்பின் 3-வது விருந்தாளி டிஜிட்டல் துறை. இது நிதிமூலதனத் துறையுடன் சிக்கல் நிறைந்த ஆனால் பரஸ்பர பயனுறவு கொண்டுள்ளதாகும். நவம்பர் 8 இரவு ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற மோடியின் அறிவிப்புக்குப் பிறகு டிஜிட்டல் பேமண்ட் ஆப்கள், இ-வாலட் நிறுவனங்கள் சாதனை டவுன்லோடுகளையும், டெபாசிட்களையும் ஈட்டியுள்ளன. இந்த நிதிப்பரிமாற்ற தொழில்நுட்ப தொழிலில் நிதிமூலதன நிறுவனங்கள் கடும் முதலீடுகளைச் செய்துள்ளன, இதனையடுத்தே பெரிய அளவில் இந்த டிஜிட்டல் பேமண்ட் ஆப்கள் மற்றும் இ-வாலட் நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் விளம்பரங்களுக்காக செலவு செய்ய முடிந்துள்ளது.

இறுதியாக, கடனில் மூழ்கும் உலகளாவிய மந்த நிலை, கடுமையான வருவாய் சமத்துவமின்மை, உண்மையான ஊதியங்களின் மந்த நிலை ஆகியவை அடங்கிய ஒரு உலகச் சூழ்நிலையில் மூலதனத் திரட்டு என்பது வருவாயை கீழிருந்து மேல்நோக்கி திருப்பும் (99%-லிருந்து 1%க்கு) நடைமுறையாகவே அமைய முடியும். சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறை அரசுக்கு இந்தக் குறிக்கோளை நிறைவேற்றும் எனில், தனிநபர்களின், குடும்பங்களின் சொந்த சேமிப்பு என்பதை உலகளாவிய கடன் பொருளாதாரத்தில் ஒருங்கிணைக்கும் நடவடிக்கையை வருவாயை கீழிருந்து மேல்தட்டு நோக்கி திருப்பும், நகர்த்தும் முறை நிதிமூலதனத் துறைக்கு சாதித்துக் காட்டி விடும். இந்த இரண்டு சந்தர்ப்பங்களுக்கும் முதன்மை தேவை என்னவெனில் மூலதன மற்றும் சரக்கு சுழற்சியை முறையே இதற்கு அப்பாலுள்ள, இதனுள் அடங்கமறுக்கும் வரிவிதிப்பு மற்றும் கடன் (அதாவது ஒட்டுமொத்த பணப்பொருளாதாரத்தையே) முதலிய களங்களைக் கைப்பற்றுதலாகும். எனவே அரசு-நிதி கூட்டிணைவு என்ற ஆதிக்க நிலையை எய்துவதற்கு ரொக்கமற்ற பொருளாதாரம் என்பது மையக் காரணியாக விளங்குகிறது.

சகஜநிலை (Normal) என்பதன் விளக்கம்:

வர்த்தகங்கள் முதல் ஆய்வாளர்கள், சாதாரண குடிமக்கள் வரை இந்தியாவில் ஒவ்வொருவரும் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்காகக் காத்திருக்கின்றனர். ஆனால் இந்த ‘இயல்பு நிலை’ அல்லது ‘சகஜநிலை’ என்பதை உண்டாக்குவது எது? சாதாரண மக்கள் மனநிலையைப் பொறுத்தவரை இயல்பு நிலைக்குத் திரும்புதல் என்பது ஏடிஎம் வாசல்களில் மணிக்கணக்காக காத்திருக்காமல் இருப்பது. ஆனால் வரிசை நீளமாக இருப்பதற்குக் காரணம் அதிக மக்கள், குறைந்த பணம் என்பது மட்டுமல்ல. பணம் எவ்வளவு எடுக்க முடியும் என்பதற்கு விதிக்கப்பட்டுள்ள உச்சவரம்பும் கியூவின் நீளத்திற்கு மற்றொரு காரணம். இதனால்தான் வெவ்வேறு இடங்களில் அவர்கள் பணத்திற்காக வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. எனவே பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு முன்னதான இயல்பு நிலைக்குத் திரும்புதல் என்பது பணம் எடுப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் இல்லாமல் போகும்போதே.

இயல்பு நிலை என்பதற்கு இத்தகைய விளக்கம் என்பது பணமதிப்பு நீக்க நடவடிக்கை கறுப்புப் பண, கள்ள நோட்டு ஒழிப்பு என்பதாகவோ ஏன்,வங்கிகளுக்கு மறுமூலதனம் திரட்டும் நடவடிக்கையாகவோ இருக்கும் போது செல்லுபடியாகும் விளக்கமாக இருக்கும். இவையெல்லாம் ஏற்கெனவே நடந்துள்ளன அல்லது இவையெல்லாம் ஒருபொருட்டேயல்ல என்ற நிலையில் இயல்பு நிலை குறித்த விளக்கம் இத்தகைய தன்மையினதாக இருக்க வாய்ப்புள்ளது. அதாவது நீங்கள் உங்களை ஒரு நேர்மையான குடிமகனாக வரிந்து கொண்டு நல்ல பணத்தையே பயன்படுத்துகிறீர்கள், கறுப்புப் பணத்தையல்ல எனும்போது நீங்கள் நோட்டு தடை நடவடிக்கைக்கு முந்தைய இயல்பு நிலைக்குத் திரும்புவதை விரும்பலாம், ஒரு வித்தியாசத்துடன், அதாவது பழைய நோட்டுகளுக்குப் பதிலாக புதிய நோட்டுகள் விரைவில் எண்ணிக்கையில் அதிகமாக கிடைக்கும் என்ற எண்ணத்துடன் நீங்கள் இருக்கும் இயல்பு நிலை.

ஆனால் பிரதமர் இதுவரை பேசியதும், செய்ததும் இந்த ‘பழைய’ இயல்பு நிலைக்குத் திரும்புவதை அறிவுறுத்துவதாக இல்லை. எத்தனை புதிய நோட்டுகள் அச்சடிக்கப்படுவதாக கூறப்படுகிறதோ, எத்தனை ஏடிஎம்கள் புதிதாக வடிவமைக்கப்படுகின்றனவோ, வெகுஜன/முறைசாரா துறைகளில் எத்தனை பேர் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுகிறதோ என்பதைப் பற்றியெல்லாம் எந்தவித கவலையுமில்லாமல் பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பு உடனடிகாலக்கட்டத்தில் நீக்கப்பட விலக்கிக் கொள்ளப்பட மாட்டாது. இதற்கு எந்த ஒரு தேதியும் இதுவரை அறிவுறுத்தப்படவில்லை.

இதற்கான காரணம் எளிமையானது: பணமதிப்பு நீக்க நடவடிக்கை கறுப்புப் பண ஒழிப்புக்காக அல்ல, மாறாக பணத்தையே எதிர்கொள்வது என்பதே. இது மாறவேண்டுமெனில் கடுமையான அரசியல் அழுத்தங்கள் மிக இன்றியமையாதது. பிரதமரின் இந்தப் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு வங்கித்துறை பின்னால் உறுதியுடன் ஆதரவளிப்பது ஒன்றும் ஆச்சரியமளிக்கக் கூடியதல்ல. இதுவேதான் தகவல் தொழில் நுட்பத்துறையின் நிலைப்பாடும். வளர்ச்சியில் ஏற்படும் தாக்கம் என்ற ஒருசில கீச்சுக்குரல்களை தவிர கார்ப்பரேட் துறைகளும் மோடிக்கு உறுதுணையாகவே உள்ளன. பணமதிப்பு நீக்க நடவடிக்கை நேரடியாக பாதித்த மக்கள் தொகுதி இதற்கு ஆதரவளிக்காமல் இருக்க வாய்ப்புள்ளது: பெரிதும் பாதிக்கப்பட்ட வெகுஜன/முறைசாரா துறைகளின் ஆதரவு பிரதமருக்கு இருக்காது, அதாவது இவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக டிஜிட்டல் பேமன்ட் முறைக்கு மாறினால்தான் எதிர்ப்பு அடங்கும். இதைத்தான் இவர்கள் செய்ய வேண்டுமென அரசு எதிர்பார்க்கிறது.

அரசியல் விளைவுகள் வேறு கதை என்றால் மோடியின் இந்த பணமற்ற இந்தியா என்பதை நோக்கிய நகர்வு 1991-ம் ஆண்டு மன்மோகன் சிங் ஏற்படுத்திய தாராளமயமாக்க பொருளாதார தர்க்கத்தின் உச்ச கட்டமே. இத்தகைய கருத்தியல் பார்வையில்தான், பணமற்ற பொருளாதாரத்தை நோக்கிய மாற்றம் என்ற சொல்லாடல் துல்லியமான அர்த்தத்தை கொடுக்கும்.

தமிழில்: ஆர்.முத்துக்குமார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x