பாலியல் வழக்கில் இருந்து விடுதலையானவர் ரூ.10 ஆயிரம் கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு

பாலியல் வழக்கில் இருந்து விடுதலையானவர் ரூ.10 ஆயிரம் கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு
Updated on
1 min read

ரத்லாம்: மத்தியபிரதேச மாநிலம் ரத்லாம் பகுதியிலுள்ள மான்சா போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் காந்திலால் பீல் (35). இவர் மீது கடந்த 2020-ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இவர் சிறையில் 2 ஆண்டுகளாக இருந்தார்.

இந்நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 20-ம் தேதி இவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து ரத்லாம் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் காந்திலால் பீல், ரூ.10 ஆயிரத்து 6 கோடியே 2 லட்சம் கோடி நஷ்ட ஈடு கேட்டு, மத்தியபிரதேச அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதுகுறித்து தனது மனுவில் காந்திலால் பீல் கூறியதாவது: பொய் வழக்கில் 2 ஆண்டுகளாக சிறையில் பல கொடுமைகளை அனுபவித்தேன். எனது வயதான தாயார், மனைவி, 3 குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பு எனக்கு இருந்தது. திடீரென என்னை சிறையில் தள்ளியதால் எனது குடும்பம் வறுமையில் வாடியது. பட்டினியால் அவர்கள் அவதிப்பட்டனர்.

எனவே, எனக்கும் எனது குடும்பத்தாருக்கும் ஏற்பட்ட நஷ்டத்துக்கும், மன உளைச்சலுக்கும், வழக்குச் செலவுகளுக்கும் மத்தியபிரதேச மாநில அரசு ரூ.10 ஆயிரத்து 6 கோடியே 2 லட்சத்தை நஷ்டஈடாகத் தரவேண்டும். மனித வாழ்க்கை மதிப்புமிக்கது என்பதை அரசு உணரவேண்டும். இதில் ரூ.2 லட்சம் வழக்கு செலவுகளுக்கானது. இவ்வாறு அவர் கூறினார். இந்த வழக்கு வரும் 10-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in