

பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் சாதகங்களை அடுக்கிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பணமதிப்பு ஆக்கம் தொடர்பான சாத்தியங்களையும் விவரித்துள்ளார்.
குறிப்பாக, பணமதிப்பு ஆக்க நடவடிக்கைகள் நிறைவடைய மிக நீண்ட காலம் ஆகாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஃபிக்கி (இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு) அமைப்பின் 89-வது ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் பேசிய அருண் ஜேட்லி, மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் அதன் தொடர்ச்சியான பணமதிப்பு ஆக்க நடவடிக்கைகள் குறித்து கூறியதன் 8 முக்கிய அம்சங்கள்:
* வளர்ந்த நாடுகளே இதுபோன்ற முயற்சிகளுக்கு அஞ்சும் சூழலில், இந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கை என்பது இந்தியாவின் தனித்துவமானதும், தைரியமானதுமான முடிவாகவே பார்க்கப்படுகிறது.
* தெளிவு, உத்வேகம், சுமையைத் தாங்கும் சக்தி மற்றும் உறுதிப்பாடு ஆகியவை இருந்தால் மட்டுமே இதுபோன்ற முடிவுகளை மேற்கொள்ள முடியும்.
* உயர் மதிப்பு மிக்க நோட்டுகளின் பணமதிப்பை நீக்கி, மிகப் பெரிய அளவிலான பணத்தை மாற்றித் தருவது என்பது வியத்தகு உத்வேகம் மிக்க நடவடிக்கை.
* நம் கண் முன்னால் 70 ஆண்டுகளாக நடந்தவை ஏற்கத்தக்கதே அல்ல. வங்கி முறையை பாதிக்கும் செயல்கள், வரி செலுத்துவதில் இருந்து தப்பித்தல் மற்றும் குற்றங்களுக்காக ரொக்கப் பணத்தைப் பயன்படுத்துதல் முதலானவை 'வாழும் முறை'யாகவே மாறிவிட்டதால், பொருளாதார வளர்ச்சி விகிதம் மட்டுமின்றி, சமூகப் பொருளாதாரச் சூழலிலும் பாதகங்கள் மலிந்துவிட்டன.
* ஏழைகளின் கைகளில் செல்பேசி என்ற கருத்துகள் 2000-ம் ஆண்டில் முன்வைக்கப்பட்டபோது மக்கள் சிரித்தனர். ஆனால், அது உண்மையில் நடந்தேறியது. அதே கொள்கை முடிவுகள் இதற்கும் (பணமதிப்பு நீக்க விளைவுகள்) பொருந்தும் என்பது நாடாளுமன்றத்தில் உள்ள சிலருக்கு மட்டும் புரிபடவில்லை.
* டிஜிட்டல் வழி பணப்பரிவர்த்தனை என்பது 100 முதல் 1,000 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. அதாவது, நாடு முழுவதும் 75 கோடி என்ற எண்ணிக்கையில் டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் மற்றும் இ-வாலட்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
* பணமதிப்பு நீக்க நடவடிக்கை என்ற பெருமுயற்சிக்கு பலன்கள் நிச்சயம் உண்டு.
* பணமதிப்பு ஆக்க நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்கு மிக நீண்ட காலம் ஆகாது. அதாவது, புதிய நோட்டுகளின் புழக்கமானது கூடிய விரைவில் இயல்புநிலையை எட்டும்.