“அசாம் ஒன்றும் வெளிநாடு அல்ல” - மாநில அரசின் நடவடிக்கைக்கு ஒவைசி கண்டனம்

அசாதுதின் ஒவைசி |  கோப்புப் படம்
அசாதுதின் ஒவைசி | கோப்புப் படம்
Updated on
1 min read

புதுடெல்லி: அசாமில் உள்ள மதரசாக்களில் பாடம் நடத்த வரும் வெளிமாநில ஆசிரியர்களை காவல் துறை அவ்வப்போது விசாரிக்கும் என அம்மாநில முதல்வர் கூறியுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஒவைசி, அசாம் ஒன்றும் வெளிநாடு அல்ல என தெரிவித்துள்ளார்.

ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா அறிவிப்பு: கடந்த ஞாயிற்றுக்கிழமை பேசிய அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா, ''அசாமில் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத 3,000 மதரசாக்கள் உள்ளன. பகுத்தறிவுடன் கூடியதாக மதரசா கல்வி இருப்பதை உறுதிப்படுத்தும் பணி காவல் துறைக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அசாமில் உள்ள இஸ்லாமியர்களுடன் இணைந்து காவல் துறை பணியாற்றி வருகிறது.

இந்த விவகாரத்தில், முற்போக்கு சிந்தனையுடன் இருக்கும் மேற்கு வங்க இஸ்லாமிய அறிஞர்களுடன் அசாம் காவல் துறை ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. அசாமில் உள்ள மதரசாக்களில் பாடம் நடத்த வெளி மாநிலங்களில் இருந்து வரும் ஆசிரியர்கள், அவ்வப்போது உள்ளூர் காவல் நிலையங்களுக்கு வருமாறு அழைக்கப்படலாம்'' என்று அவர் தெரிவித்தார்.

இஸ்லாமிய மதகுருமார்கள் அசாமில் ஜிஹாதி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக எழுந்த புகாரை அடுத்து மாநில அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அசாதுதின் ஒவைசி கடும் கண்டனம்: அசாம் முதல்வரின் இந்த அறிவிப்புக்கு அகில இந்திய மஜிலிஸ் இ இத்தஹாதுல் முஸ்லிமீன் தலைவர் அசாதுதின் ஒவைசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ''அசாம் ஒன்றும் வெளிநாடு அல்ல. இந்தியர்கள் அசாம் வருவதற்கு அனுமதி கோர வேண்டிய அவசியம் இல்லை. இந்திய குடிமக்கள் நாட்டின் எந்த பகுதிக்கும் செல்வதற்கும், தங்குவதற்குமான அடிப்படை உரிமையை அரசியல் சானம் வழங்கி இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் நடத்தும் பள்ளிகளுக்கும் இதேபோன்ற கட்டுப்பாடுகளை விதிப்பீர்களா? அசாமில் இருந்து வருபவர்களுக்கு பிற மாநிலங்கள் கட்டுப்பாடுகள் விதித்தால் என்ன ஆகும்?'' என ஒவைசி கேள்வி எழுப்பி உள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in