‘நாய்க்குட்டி போல...’ - சித்தராமையா விமர்சனமும், பசவராஜ் பொம்மையின் பதிலடியும்

சித்தராமைய்யா
சித்தராமைய்யா
Updated on
1 min read

விஜயநகர்: “பிரதமர் மோடியைக் கண்டால் நாயக்குட்டியைப் போல் அஞ்சி நடுங்குபவர்தான் முதல்வர் பசவராஜ் பொம்மை” என கர்நாடக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா விமர்சித்துள்ளார். இதற்கு, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பதிலடி தந்துள்ளார்.

விஜயநகரில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் பேசிய சித்தராமையா, ''பசவராஜ் பொம்மையும் பாஜகவின் பிற தலைவர்களும் பிரதமர் மோடியைக் கண்டால் நாய்க்குட்டியைப் போல மாறிவிடுவார்கள். நடுக்கத்தோடு நிற்பார்கள். கர்நாடகாவுக்கு சிறப்பு நிதியாக ரூ.5,495 கோடி ஒதுக்குமாறு மாநில அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இவ்வளவு பெரிய தொகையை வழங்க முடியாது என்று கூறிவிட்டார்'' என்று தெரிவித்தார்.

சித்தராமைய்யாவின் இந்தப் பேச்சு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ள முதல்வர் பசவராஜ் பொம்மை, ''இதுபோன்று பேசுவது அவரது வாடிக்கை. இதற்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை. ஆனால், நன்றியுணர்வுக்கு அடையாளமாக இருப்பது நாய். நானும் கர்நாடக மக்களுக்கு நன்றியுடன் எனது கடமையை ஆற்றி வருகிறேன். எனவே, அவர்கள் என்னை நாய் என்று குறிப்பிட்டாலும், நான் அதை நேர்மறையாகவே எடுத்துக்கொண்டு மக்கள் பணியாற்றுவேன். காங்கிரஸ் கட்சி செய்வதைப் போல நான் சமூகத்தை பிளவுபடுத்தவில்லை'' என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in