

மத்திய அரசு விரைந்து செயல்பட்டு, தன்னைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு, ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள கேரள கிறிஸ்தவ பாதிரியார் தாமஸ் உழுன்னலில், வீடியா பதிவு மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்தாண்டு மார்ச் 4-ம் தேதி ஏமன் நாட்டில் முதியோர் காப்பகம் ஒன்றில் நுழைந்த தீவிரவாதிகள், அங்கிருந்த இந்திய செவிலியர் உள்ளிட்டோரைக் கொன்றுவிட்டு, கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியாரான தாமஸ் உழுன்னலில் என்பவரைக் கடத்திச் சென்றனர். ஏமனில் இந்தியத் தூதரகம் செயல்படாததால், அரசு சார்பில் உடனடி நடவடிக்கை மேற் கொள்ளப்படவில்லை. எனினும், பிரதமர் நரேந்திர மோடி நேரடி யாக பல்வேறு நாட்டுத் தலைவர் களுடன் இதுகுறித்து பேசி வருவதாக, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.
பாதிரியாரை விடுவிப்பதற்கான நடவடிக்கையை வெவ்வேறு நாட்டு அரசுகள் மூலம் மேற்கொள்வதால், கூடுதல் கால அவகாசம் தேவைப்படும் என்றும் சுஷ்மா அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். கடத்தப்பட்ட பாதிரியார் மழிக்காத தாடி, மீசை மற்றும் தலைமுடியுடன் சோர்ந்து போய் காட்சியளிக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ சில மாதங்களுக்கு முன்பு, அவரின் முகநூல் பக்கம் மூலம் வெளியானது. இந்நிலையில், அதேபோன்ற வாடிய தோற்றத்துடன் பாதிரியார், தன்னைத் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கக் கோரும் புதிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
5 முதல் 6 நிமிடங்கள் வரை பதிவான அந்த வீடியோவில், ‘என்னை விடுவிக்க அரசு தரப்பில் தீவிரமான நடவடிக்கை எடுக்கப்படாதது வேதனை அளிக்கிறது. என் உடல் நிலை மோசமடைந்து வருகிறது. தயவு செய்து காப்பாற்றுங்கள். இந்தியன் என்பதால் எனக்கு மதிப்பில்லையா? என்னுடன் கடத் தப்பட்ட பிரான்ஸ் பெண் பத்திரிகை யாளர், அந்நாட்டு அரசின் முயற்சி யால் காப்பாற்றப்பட்டுவிட்டார். ஐரோப்பிய நாடுகளைச் சேரந்தவ னாக இருந்திருந்தால், இந்நேரம் நானும் மீட்கப்பட்டிருப்பேன்’ என, பாதிரியார் தாமஸ் உழுன்னலில் கூறியுள்ளார்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் போப் பிரான்சிஸ் ஆகியோர் உடனடியாக தலையிட்டு, தீவிரவாதிகளின் பிடியில் இருந்து தன்னைக் காப்பாற்ற வேண்டுமென பாதிரியார் கோரியுள்ளார். அபுதாபியில் உள்ள உறவினர் ஒருவரின் மூலம் இந்த வீடியோ தங்களுக்கு வழங்கப்பட்டதாக பாதிரியாரின் குடும்பத்தார் தெரி வித்தனர். மேலும், இதே வீடி யோவை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் யூ ட்யூப்பிலும் பதிவேற்றியுள்ளார்.