ஹெலிகாப்டர் பேர ஊழலில் கைதான எஸ்.பி. தியாகிக்கு 4 நாள் போலீஸ் காவல்: சிபிஐக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி

ஹெலிகாப்டர் பேர ஊழலில் கைதான எஸ்.பி. தியாகிக்கு 4 நாள் போலீஸ் காவல்: சிபிஐக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி
Updated on
1 min read

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலி காப்டர் பேர ஊழலில் கைதான இந்திய விமானப் படை முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகி உள்ளிட் டோரை 4 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது விவிஐபிக்கள் பயணிப்பதற்காக இத்தாலியை சேர்ந்த பின்மெக்கானிக்காவின் கிளை நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.3,600 கோடி மதிப்பில் 12 ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்ய ரூ.450 கோடி லஞ்சம் பெற்றதாக அப்போதைய விமானப் படை தளபதி எஸ்.பி.தியாகி, அவரது உறவினர்கள் மற்றும் இடைத் தரகர்கள் மீது புகார் எழுந்தது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் முக்கிய குற்றவாளிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதைத் தொடர்ந்து கடந்த 2014 ஜனவரியில் ஹெலிகாப்டர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக இந்திய விமானப் படை முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகி, அவரது உறவினர் சஞ்சீவ் தியாகி, வழக்கறிஞர் கவுதம் கைதான் ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் நேற்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘சர்வதேச அளவில் மிகப் பெரிய அளவில் ஊழல் சதி நடந்திருப்பதால் எஸ்.பி.தியாகி உள்ளிட்டோரை 10 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனு மதிக்க வேண்டும்’’ என வாதாடினார். இதையடுத்து இவர் களை 4 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க மாஜிஸ்திரேட் சுஜித் சவுரப் அனுமதி அளித்தார்.

இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து நேற்று கொல்கத்தா விமான நிலையத்தில் பேட்டியளித்த விமானப் படை தளபதி அரூப் ரஹா, ‘‘ஊழல் வழக்கில் முன்னாள் விமானப்படை தளபதி கைது செய்யப்பட்டிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. விமானப் படையின் புகழுக்கும் களங்கத்தை ஏற்படுத்திவிட்டது. எனினும் சட்டத்தின் மீது நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in