Published : 03 Jan 2023 04:21 PM
Last Updated : 03 Jan 2023 04:21 PM

“இந்தியா எப்போதும் போருக்கு எதிரான நாடு. ஆனால்...” - பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

சியாங்: “இந்தியா எப்போதும் போருக்கு எதிரானது என தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், “போரிட வேண்டிய கட்டாயம் வந்தால், அதற்கு இந்தியா ஒருபோதும் தயங்காது” என்றும் கூறியுள்ளார்.

அருணாச்சலப் பிரதேசத்தில் சீனாவை ஒட்டிய பகுதியில் 100 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டுள்ள சியோம் பாலத்தை ராஜ்நாத் சிங் இன்று (செவ்வாய்க்கிழமை) நேரில் துவக்கி வைத்தார். மேலும், எல்லை சாலை அமைப்பு (Border Roads Organisation) சார்பில் உருவாக்கப்பட்ட எல்லையோர சாலைகள் உள்ளிட்டவற்றை அவர் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

நவீன தொழில்நுட்ப உதவியுடன் நுட்பமான முறையில் கட்டப்பட்டுள்ள சியோம் பால திறப்பு விழாவில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: “உலகம் முழுவதும் எண்ணற்ற மோதல்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்தியா எப்போதும் போருக்கு எதிரானது. இது நமது கொள்கை. உக்ரைன் - ரஷ்யா இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் நமது பிரதமர் நரேந்திர மோடி கூறிய, 'இது போருக்கான காலம் அல்ல' என்ற கருத்து சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்ததை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

போர் மீது நமக்கு நம்பிக்கை இல்லை. அதேநேரத்தில் திணிக்கப்பட்டால் போர் புரிய நாம் தயங்க மாட்டோம். அனைத்து வகையான அச்சுறுத்தல்களில் இருந்தும் நாடு காக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. நமது ராணுவம் தயாராக இருக்கிறது. எல்லை சாலை அமைப்பு அவர்களுக்கு தோளோடு தோள் கொடுத்துக் கொண்டிருக்கிறது. உலக சூழலைப் பொருத்து எதிர்காலத்தில் ஏற்பட வாய்ப்புள்ள சவால்களை கருத்தில் கொண்டே நாம் தற்போது எல்லையில் பல்வேறு கட்டமைப்புகளை வலுப்படுத்தி வருகிறோம்.

நாட்டின் வட எல்லையில் நிகழ்ந்த சம்பவத்தை நமது வீரர்கள் துணிவுடன் எதிர்கொண்டதை சமீபத்தில் நாம் பார்த்தோம். போதுமான கட்டமைப்புகளை நாம் உருவாக்கியதுதான் இதற்குக் காரணம். இந்த கட்டமைப்புகள் நம்மை மேலும் ஊக்கப்படுத்துகின்றன. எல்லையோர மக்களின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும் என்பதே பிரதமர் நரேந்திர மோடியின் விருப்பம்” என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு, கிழக்குப் பிராந்திய ராணுவ கமாண்டர் காலித்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x