

வியன்னா: பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் இருப்பதாக வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரியா சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், அந்த நாட்டின் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது, பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். இது கடினமான வார்த்தையாக தெரியவில்லையா என நெறியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு விளக்கம் அளித்த ஜெய்சங்கர், ''பயங்கரவாதத்தின் மையம் என்பது நாகரிகமான விமர்சனம்தான். இதைவிட கடினமான வார்த்தையைக் கூட பயன்படுத்தி இருக்க முடியும். எங்களுக்கு என்ன நேர்ந்துகொண்டிருக்கிறது என்பதை கவனியுங்கள்.
சில வருடங்களுக்கு முன்பு எங்கள் நாட்டின் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய நாடு பாகிஸ்தான். எங்கள் மும்பை மாநகருக்குள் நுழைந்து நட்சத்திர விடுதிகளில் தாக்குதல் நடத்திய, வெளிநாட்டு பயணிகள் மீது தாக்குதல் நடத்திய நாடு பாகிஸ்தான். அந்த நாடு நாள்தோறும் பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் அனுப்பிக்கொண்டே இருக்கிறது. பல பத்தாண்டுகளாக இது நடந்து கொண்டிருக்கிறது. எனவே, பயங்கரவாதத்தின் மையம் என்று பாகிஸ்தானை விமர்சிப்பது சரியானதே'' என குறிப்பிட்டார்.
ஆஸ்திரிய நாட்டின் வெளியுறவு அமைச்சருடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜெய்சங்கர், ''பயங்கரவாதத்தின் மையமானது எங்கள் நாட்டுக்கு அருகில் இருக்கிறது. எனவே, பயங்கரவாதம் தொடர்பான எங்கள் அனுபவம் என்பது மற்ற நாடுகளுக்கு மதிப்பு மிக்கதாக இருக்கும்'' என்று தெரிவித்தார்.