டெல்லி சம்பவம் | உயிரிழந்த இளம் பெண் வாகனத்தில் தனியாக பயணிக்கவில்லை: காவல் துறை தகவல்

டெல்லி சம்பவம் | உயிரிழந்த இளம் பெண் வாகனத்தில் தனியாக பயணிக்கவில்லை: காவல் துறை தகவல்
Updated on
1 min read

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் இளம் பெண் ஒருவர் காரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த விவகாரத்தில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த இளம் பெண் இருசக்கர வாகனத்தில் தனியாகச் செல்லவில்லை என்றும் அவர் பின்னால் இன்னொரு பெண் அமர்ந்து சென்றார் என்றும் தெரியவந்துள்ளது. விபத்தில் அவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. சுதாரித்துக் கொண்டு தப்பித்த அந்தப் பெண் வீட்டுக்குச் சென்றுள்ளார். ஆனால் இருசக்கர வாகனத்தை ஓட்டிய இளம் பெண்ணின் கால் காரில் சிக்கிக் கொள்ள அவர் உயிரிழந்திருக்கிறார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

விபத்து தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது இது தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இரவல் கார்: விபத்தை ஏற்படுத்திய காரை தீபக் கண்ணா என்பவர் ஓட்டியுள்ளார். அவர் தனது நண்பரிடமிருந்து அந்த காரை டிசம்பர் 31 ஆம் தேதி இரவு 8 மணியளவில் இரவலாக வாங்கியுள்ளார். அந்தக் காரில் தனது 4 நண்பர்களை ஏற்றிக் கொண்டு ஹரியாணாவுக்கு செல்லும்போது தான் இந்த விபத்து நடந்துள்ளது.

முதலில் காவல்துறைக்கு காலை 3.20 மணிக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் ஒரு சாம்பல் நிற மாருதி பலீனோ காரில் சடலம் ஒன்று இழுத்துச் செல்லப்படுவதாக கூறியுள்ளார். அது குறித்து காவல்துறையினர் விசாரித்துக் கொண்டிருந்த வேளையில் 4.11 மணிக்கு இன்னொரு அழைப்பு வந்துள்ளது. அப்போது பேசிய நபர் கஞ்சாவாலா பிரதான சாலையில் இளம் பெண் சடலம் கிடப்பதாகக் கூறினார். இதனையடுத்து கார் பறிமுதல் செய்யப்பட்டதோடு அதிலிருந்த ஐந்து பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது கவனக்குறைவாக வாகனத்தை இயக்கியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 5 பேரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் இந்த வழக்கு குறித்து தீர விசாரிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் டெல்லி காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது. முன்னதாகா நேற்று டெல்லி சுல்தான்புரியில் நடந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு மக்கள் காவல்நிலைய முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in