

பகுஜன் சமாஜ் கட்சிக்கு அவப்பெயரை உண்டாக்கும் வகையில், அரசாங்க இயந்திரத்தை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது, என அக்கட்சியின் தலைவரும், உ.பி மாநில முன்னாள் முதல்வருமான மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியினுடைய வங்கிக் கணக்கில் ரூ.104 கோடி அளவுக்கு பணம் செலுத்தப்பட்டிருப்பதை மத்திய அமலாக்கப் பிரிவு திங்களன்று கண்டுபிடித்தது. யுனைடெட் பாங்க் ஆப் இந்தியாவின் டெல்லி கிளையில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியின் சகோதரர் ஆனந்த் பெயரிலான கணக்கிலும் சந்தேகத்துக்கு இடமான வகையில் ரூ.1.43 கோடி செலுத்தப்பட்டதும் சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில் லக்னோவில் செவ்வாயன்று அவசரமாக பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்த மாயாவதி, ‘வங்கியில் செலுத்தப்பட்ட பணத்துக்கு முறையான ஆவணங்கள் இருப்பதாகவும், அனைத்தும் சட்ட விதிகளுக்கு உட்பட்டே செய்யப்பட்டதாகவும் கூறினார்.
மாயாவதி கூறியதாவது: முறைப்படி, கட்சி விதிகளுக்கு உட்பட்டே எல்லா டெபாசிட்களும் செய்யப்பட்டன. அந்த பணம், மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கை அறிவிப்புக்கு முன்பு வசூலிக்கப்பட்டவை. அவற்றை நாங்கள் என்ன வெளியே தூக்கி வீசிவிடவா முடியும்?
வங்கியில் செலுத்திய ஒவ்வொரு ரூபாய்க்கும் எங்களிடம் கணக்கு உள்ளது. நாடு முழுவதும் உறுப்பினர் கட்டணமாக வசூலிக்கப்பட்ட பணம் இது. கிராமங்களில் இருந்து எடுத்துவர சுலபமாக இருக்கும் என்பதற்காக உயர் மதிப்பு கரன்சி நோட்டுகளாக மாற்றப்பட்டு, வங்கியில் டெபாசிட் செய்ய கொண்டுவரப்பட்டது.
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குவதால், பகுஜன் சமாஜ் கட்சியின் இமேஜை கெடுக்க வேண்டும் என்பதற்காக பாஜக தலைமையிலான மத்திய அரசு வேண்டுமென்றே அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்துகிறது.
கூட்டணி விவகாரத்தில் பாஜகவின் சதித்திட்டத்தை நான் அம்பலப்படுத்தியதால் அவர்கள் என்னை குறிவைக்கின்றனர். மேலும், பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு நாட்டிலேயே முதல் ஆளாக நான் தான் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தேன். எனக்குப் பிறகு மற்ற எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.
அந்த ஆத்திரத்தில் பாஜக தலைமையிலான மத்திய அரசு என்னையும், என் உறவினர்களையும் குறிவைத்து செயல்படுகிறது. இதேபோன்ற அணுகுமுறையை பிரதமர் மோடியும், மத்திய அரசும் தொடர்ந்து கையாண்டால், உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி மீண்டும் ஆட்சியை பிடிப்பது உறுதியாகிவிடும்.
இவ்வாறு மாயாவதி கூறினார்.