

தெலங்கானா மாநிலத்தில் ஏழைகளுக்கு வீடு கட்ட அரசு வழங்கிய ரூ.3,920 கோடியை தள்ளுபடி செய்வதாக மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவ் அறிவித்தார்.
ஹைதராபாத்தில் தற்போது தெலங்கானா மாநில சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஏழைகளுக்கு அரசு கட்டித் தரும் 2 படுக்கை அறை வீடுகள் குறித்தும், ஏற்கெனவே ஏழைகளுக்கு அளித்துள்ள மானிய விலை வீடுகள் குறித்தும் காரசாரமான விவாதம் நடைபெற்றது.
அப்போது காங்கிரஸ் உறுப்பினர்கள், தெலங்கானா முதல்வர் சமீபத்தில் குடியேறிய விலை மதிப்புமிக்க வீடு குறித்து தீவிரமாக விமர்சித்தனர். இவ்வளவு ஆடம்பரமான வீடு தேவையா? என கேள்வி எழுப்பினர். இதற்கு தெலங்கானா முதல்வர் கே. சந்திர சேகர ராவ் பதிலளிக்கையில், அந்த வீடு எனது சொந்த காசில் கட்டிக்கொண்ட வீடு அல்ல. மக்கள் பணத்தில் கட்டியது. இது தெலங்கானா மாநில முதல்வரின் வீடு. இது இந்த மாநில முதல்வருக்கு வழங்கப்படும் ஒரு கவுரமாகும் எனக் கூறினார்.
மேலும், ஏழைகளுக்கு வீடு கட்ட வழங்கிய வங்கிக் கடன் ரூ.3,920 கோடியை முழுவதுமாக தள்ளுபடி செய்வதாகவும் அவர் அறிவித்தார்.