

புதுடெல்லி: பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி முறைகேடுகளை சுட்டிக் காட்டியிருப்பதில் மகிழ்ச்சி. இது கடினமான கண்டனமோ தண்டனையோ இல்லையென்றாலும் கூட தவற்றை சுட்டிக்காட்டியதில் மகிழ்ச்சியே என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி, மத்திய அரசு நாட்டில் அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தது. அரசின் இந்த பணமதிப்பு இழப்பு நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 58 ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. அதில் 4 நீதிபதிகள் பணமதிப்பிழப்பு செல்லும் என்றும், அதற்கு எதிராக ஒரு நீதிபதியும் தீர்ப்பளித்தனர்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு முடிவெடுக்கும் நடைமுறையை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளது, பணமதிப்பிழப்பு நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது தவறாக வழிநடத்தும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், எம்.பி.,யுமான ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 2016 ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்படுவதற்கு முன்பு, ரிசர்வ் வங்கி சட்டம் 1934, பிரிவு 26(2) சரியாக நடைமுறைப்படுத்தப்பட்டதா இல்லையா என்பதை மட்டுமே தெரிவித்துள்ளது. அதைத் தவிர அதிகமாகவும் குறைவாகவும் எதுவும் இல்லை. மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ள நீதிபதி தனது தீர்ப்பில், நாடாளுமன்றம் புறக்கணிக்கப்படக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் தாக்கங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. அந்த நடவடிக்கை வளர்ச்சியை சிதைத்தது, சிறு மற்றும் குறுந்தொழில்களை நசுக்கியது, அமைப்புசாரா தொழில்களை அழித்ததுடன் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தது.
பணப்புழக்கத்தை குறைத்தல், பணமில்லா பரிவர்த்தனைக்கு மக்களை நகர்த்துதல், கள்ள நோட்டு புழக்கத்தைக் கட்டுப்படுத்துதல், தீவிரவாதத்திற்கு நிதியளிப்பதை கட்டுப்படுத்துதல், கருப்பு பணத்தை வெளிக்கொண்டுவருதல் என, அதன் எந்த குறிப்பிடத்தக்க குறிக்கோளையும் எட்டவில்லை.
பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பு, முடிவெடுத்தலின் நடைமுறையை பற்றி மட்டுமே கணக்கில் எடுத்துள்ளது. மாறாக, நடவடிக்கையின் பயன்குறித்து பேசவில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு முற்றிலும் தவறான வழிகாட்டுதல் ஆகும்" என்று தெரிவித்துள்ளார்.
தீர்ப்பு குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ட்விட்டர் பக்கத்தில் கருத்துகள் தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்களில், "உச்ச நீதிமன்றம் ஒரு முறை தீர்ப்பு வழங்கியதும் அதனை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். இருந்தபோதிலும், தீர்ப்பு வழங்கிய பெரும்பான்மை நீதிபதிகள் 4 நீதிபதிகள்) அந்த முடிவின் மதிப்பீடுகளை கருத்தில் கொள்ளவில்லை அல்லது கூறப்பட்ட நோக்கங்கள் எட்டப்பட்டுவிட்டதாக அவர்கள் கருதவில்லை என்பதை இங்கு சுட்டிக்காட்டுவது அவசியமாகிறது. உண்மையில் அவர்கள் இலக்குகள் எட்டப்படவில்லையா என்ற கேள்வியை தெளிவாக விளக்கியுள்ளனர்.
நடவடிக்கைக்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ள நீதிபதி, பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் சட்டவிரோத மற்றும் முறைகேடு நடவடிக்கைகளை சுட்டிக்காட்டியிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இது அரசின் அதிகாரத்தின் மீது விழுந்திருக்கும் சிறிய அடிதான் என்றாலும் அதனை நாங்கள் வரவேற்கிறோம்.
உச்ச நீதிமன்ற வரலாற்றில் முக்கியமான மாறுபட்ட தீர்ப்புகளின் வரிசையில், இந்த தீர்ப்பும் பேசப்படும். இந்த தீர்ப்பு, சட்டமியற்றும் நாடாளுமன்றத்திற்கும் அதனை நடைமுறைப்படுத்தும் அரசாங்கத்திற்கும் உள்ள வேறுபாட்டை சுட்டிக்காட்டியுள்ளது. ஜனநாயகத்தில் நாடாளுமன்றத்தின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டியிருப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சியே. எதிர்காலத்தில் அரசு தனது பேரழிவு முடிவுகளை நாடாளுமன்றம் மற்றும் மக்கள் மீது திணிக்காது என நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல சிவசேனா கட்சியைச் சேர்ந்த பிரியங்கா சதுர்வேதி வெளியிட்டுள்ள ட்வீட்டில், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக தீர்ப்பு வழங்கியிருக்கும் நீதிபதி பி.வி. நாகரத்னாவை மிகவும் மதிப்பதாக தெரிவித்துள்ளார்.