ஜம்மு காஷ்மீரில் குண்டுவெடிப்பு: ஒரு குழந்தை பலி; 5 பேர் படுகாயம்

துயரத்தில் டாங்கிரி கிராம மக்கள்
துயரத்தில் டாங்கிரி கிராம மக்கள்
Updated on
1 min read

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் இன்று காலை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது. 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

பயங்கரவாத தாக்குதல்: ரஜோரி மாவட்டத்தின் டாங்கிரி என்ற கிராமத்தில் இன்று (திங்கள்கிழமை) காலை ஐஇடி குண்டு ஒன்று வெடித்துள்ளது. இதில் ஒரு குழந்தை உயிரிழந்தது. 5 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக காவல்துறை ஏடிஜிபி முகேஷ் சிங் தெரிவித்துள்ளார். இந்த பகுதியில் மேலும் ஒரு ஐஇடி குண்டு பூமியில் புதைக்கப்பட்டுள்ளதாகவும் எனவே பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ள முகேஷ் சிங், அதை அகற்றும் பணி நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டார்.

நேற்று நிகழ்ந்த தாக்குதல்: முன்னதாக இதே கிராமத்தில் நேற்று மாலை பயங்கரவாதிகள் இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து அறிக்கை வெளியிட்ட ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, ''உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணமாக அளிக்கப்படும். மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் வழங்கப்படும் மேலும், அவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்படும்'' என அதில் தெரிவித்திருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in