Published : 02 Jan 2023 11:25 AM
Last Updated : 02 Jan 2023 11:25 AM

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் | உச்ச நீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

புதுடெல்லி: கடந்த 2016ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் 4 பேர் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்றும் ஒரு நீதிபதி மாறுபட்ட தீர்ப்பும் வழங்கியுள்ளார். நீதிபதி நாகரத்னா மட்டும் மாறுபட்டு தீர்ப்பளித்தார். இதனையடுத்து மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிரான 58 வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய நீதிபதி நாகரத்னா, "பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு கொண்டுவர வேண்டுமென்றால், அந்த அதிகாரம், பணம், நாணயம், சட்டபூர்வ ஒப்பந்தம், வெளிநாட்டு பரிவர்த்தனை குறித்து பேசும் 36 வது பட்டியல் 1ல் இருந்து பெறப்பட வேண்டும். ஒருவேளை பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் மத்திய அரசு ரகசியம் காக்க விரும்பினால், அது சட்டபூர்வமானதாகவோ அல்லது அரசாணை மூலமாகவோ மேற்கொள்ளபட்டிருக்க வேண்டும் மாறாக அரசிதழில் செய்தி வெளியிடுவதன் மூலமாக அல்ல" என்று தெரிவித்திருந்தார்.

தீர்ப்பின் சாராம்சம் தற்போது வெளியாகியுள்ள நிலையில் முழுமையான தீர்ப்பு இன்று மாலைக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கு பின்னணி: மத்திய அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ரூ.500, ரூ.1,000 நோட்டுக்கள் இனிமேல் செல்லாது என அறிவித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் ஒரே இரவில் பல கோடி மதிப்பிலான இந்திய ரூபாய் புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது. இந்நிலையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை நன்கு ஆராய்ந்து எடுக்கப்பட்ட முடிவு இல்லை. அதனால் அதனை நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக 58 வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டன.

வழக்கின் வாத, விவாதங்கள்: இந்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரம் வாதிடுகையில், கள்ள நோட்டுக்கள், கருப்புபணத்தை கட்டுப்படுத்த வேறு வழிகள் குறித்து மத்திய அரசு ஆராயவில்லை. சட்டபூர்வமான ஒப்பந்தங்கள் தொடர்பாக மத்திய அரசு தன்னிச்சையாக எந்த முடிவுகளுயும் எடுக்க முடியாது. ரிசர்வ் வங்கியின் மத்திய குழுவின் பரிந்துரைகளை மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும். மேலும், நவ.7 ம் தேதியிட்ட ரிசர்வ் வங்கியின் கடிதம் உள்ளிட்ட பணமதிப்பிழத்தல் நடவடிக்கை தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்ட கூட்டத்தின் முக்கிய ஆவணங்கள், அந்த கூட்ட நடவடிக்கை குறிப்புகள் ஆகியவற்றை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது என்று வாதிட்டார்.

வங்கிகளின் குழு தனது வாதத்தில், பொருளாதார கொள்கை முடிவுகள் குறித்து நீதிமன்றம் விமர்சனம் செய்ய முடியாது என்று தெரிவித்தது. அதற்கு, பொருளாதார கொள்கை முடிவு என்பதால் அமைதியாக கைகட்டி வேடிக்கை பார்க்க முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில், நாட்டின் வளர்ச்சிக்கான நடைமுறையில், ஒரு இடைக்கால சிரமம் இருக்கத்தான் செய்தது. அந்த பிரச்சினை தொடர்ச்சியான நடவடிக்கைகள் மூலம் சரி செய்யப்பட்டு விட்டது என்று தெரிவித்திருந்தது.

இந்த பணமதிப்பிழத்தல் நடவடிக்கை அரசாங்கத்தின் தோல்வி என்றும், இந்த நடவடிக்கை நாட்டின் வணிகத்தை அழித்து, வேலையில்லா திண்டாட்டத்தை உருவாக்கியது என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டிவருகின்றன.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, "பணமதிப்பிழப்பு அறிவிக்கும் போது, நாட்டில் கருப்புப் பணம் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிடும் என்று உறுதியளிக்கப்பட்டது. ஆனால், அது நாட்டின் வணிகத்தையும், வேலை வாய்ப்பையும் அழித்தது. இந்த மாஸ்டர் ஸ்ட்ரோக் நிகழ்ந்து 6 ஆண்டுகள் ஆன நிலையில், பொதுவில் கிடைக்கும் பணம் கடந்த 2016ஆம் ஆண்டை விட 72 சதவீதம் அதிகரித்துள்ளது. பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுத்த அந்த மாபெரும் தோல்வியை பிரதமர் இன்னும் ஒத்துக்கொள்ளவில்லை" என்று தெரிவித்திருந்தார்.

மாறுபட்ட தீர்ப்பு: இந்த வழக்குகளை நீதிபதி எஸ்.ஏ. நசீர் தலைமையிலான 5 நபர்கள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. ஐந்து நபர்கள் கொண்ட அரசியல் சாசன அமர்வில், நீதிபதிகள் பி.ஆர்.காவை, பி.வி. நாகரத்னா, ஏ.எஸ் போபன்னா, மற்றும் வி.ராமசுப்ரமணியன் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர். இந்த அமர்வு நீதிமன்றத்தின் குளிர்கால விடுமுறைக்கு முன்பாக கடந்த ஆண்டு டிச.7 ஆம் தேதியில் வாதங்கள் அனைத்தையும் கேட்டுவிட்டு, தீர்ப்பை நிறுத்தி வைத்தது. இந்த நிலையில், இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று தனது தீர்ப்பை வழங்கியது. 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் 4 பேர் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்றும் ஒரு நீதிபதி மாறுபட்ட தீர்ப்பும் வழங்கியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x