'நான் வெட்கித் தலை குனிகிறேன்..' | இளம் பெண் காரில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம்; டெல்லி துணை நிலை ஆளுநர் வேதனை

விபத்தை ஏற்படுதியதாக பறிமுதல் செய்யப்பட்ட கார்
விபத்தை ஏற்படுதியதாக பறிமுதல் செய்யப்பட்ட கார்
Updated on
2 min read

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் இளம்பெண் ஒருவர் சடலமாக ஒரு காரில் பல கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக துணை நிலை ஆளுநர் கண்டனமும், வருத்தமும் தெரிவித்துள்ளார்.

தலைநகர் டெல்லியில் புத்தாண்டு இரவில் நடந்த சம்பவம் ஒன்று நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி சுல்தான்புரி பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் தனது இருச்சக்கர வாகனத்தில் வேலை நிமித்தமாக வெளியே சென்றுள்ளார். அதிகாலை நேரத்தில் அவர் வீடு திரும்பிய போது ஒரு மாருதி பொலேனோ காருடன் அந்த இருச்சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. ஆனால் அந்த காரில் இருந்தவர்கள் காரை நிறுத்தாமல் வேகமாக சென்றுள்ளனர். அப்போது விபத்தில் சிக்கிய அந்த பெண்ணின் ஆடை அவர்களது காரில் சிக்கியுள்ளது. கார் நிற்காமல் சென்றதால், அந்த பெண்ணின் ஆடை கிழிந்தால், அவர் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். சுமார் 7 கிலோமீட்டர் தூரம் வரை அந்த இளம்பெண் இழுத்துச் செல்லப்பட்டதாகத் தெரிகிறது.

இந்த அதிர்ச்சி சம்பவத்தை பார்த்து ஒருவர் அதிகாலை சுமார் 3 மணி அளிவில் காவல்துறைக்கு புகார் தந்துள்ளார். ஆனால் கார் வேகமாக சென்றதால் வாகனத்தை கண்டுபிடிக்க இயலாமல் போயுள்ளது. பின்னர் காவல்துறைக்கு மற்றொரு அழைப்பு வந்தது. அந்த நபர் கஞ்சவாலா பகுதியில் இளம்பெண்ணின் சடலம் ஒன்று நிர்வாணமாக கிடப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறை அந்த பெண்ணின் உடலை கைப்பற்றினர். சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் அந்தக் காரை பறிமுதல் செய்தனர். காரில் சென்ற தீபக் கண்ணா, அமித் கண்ணா, கிரிஷன், மித்துன், மனோஜ் மிட்டல் என 5 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

வேதனை ட்வீட்: இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து டெல்லி துணை நிலை ஆளுநர் விகே சக்சேனா ட்விட்டரில், "சுல்தான்புரியில் நடந்த சம்பவத்தால் நான் வெட்கித் தலைகுனிகிறேன். இது மனிதாபிமானமற்ற கொடுங்குற்றம். இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்களின் அசுர குணம் என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. டெல்லி காவல்துறையிடம் இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். அனைத்து கோணங்களிலும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்த இளம் பெண்ணின் குடும்பத்திற்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும். இந்த சமூகம் பொறுப்பானதாக மாற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் " என்று பதிவிட்டுள்ளார்.

தேசிய மகளிர் ஆணையம் அழுத்தம்: இந்த சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் டெல்லி காவல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில், "20 வயது இளம் பெண் காரில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. அந்தப் பெண்ணின் உடல் நிர்வாணமாக இருந்ததால் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா என்று உடற்கூறாய்வில் சோதனை செய்யப்பட வேண்டும். நேர்மையான, நியாயமான, துரிதமான விசாரணை நடைபெற வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in